75 ஆண்டுகளுக்கு பிறகு ஆவியூர் கண்மாய் மறுகால் பாய்ந்தது


75 ஆண்டுகளுக்கு பிறகு ஆவியூர் கண்மாய் மறுகால் பாய்ந்தது
x

75 ஆண்டுகளுக்கு பிறகு ஆவியூர் கண்மாய் மறுகால் பாய்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

விருதுநகர்

காரியாபட்டி,

காரியாபட்டி பகுதியான ஆவியூர், அரசகுளம், குரண்டி, மாங்குளம், கம்பிக்குடி, பாப்பணம், அல்லாளப்பேரி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நெல், வெங்காயம், தக்காளி, கத்தரிக்காய், மிளகாய், வெண்டைக்காய் ஆகிய காய்கறிகள் பல ஏக்கரில் விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிணறுகளில் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் இந்த பகுதி மக்கள் நிலையூர்- கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து அமைச்சர் தங்கம் தென்னரசு, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு சென்று நிலையூர்- கம்பிக்குடி கால்வாயில் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து பலரின் முயற்சியால் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு தண்ணீர் வந்து இந்த பகுதி கண்மாய்கள் முழுவதும் ஓரளவு நிரம்பியது. அதேபோல இந்த ஆண்டு தண்ணீர் திறக்கப்பட்டு மாங்குளம், அரசகுளம், குரண்டி, ஆவியூர், கம்பிக்குடி ஆகிய கண்மாய்கள் நிரம்பியுள்ளன.

தற்போது கம்பிக்குடி கண்மாய்க்கு தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. தற்போது வைகை அணையில் இருந்து நிலையூர்-கம்பிக்குடி கால்வாய் மூலம் தண்ணீர் வந்ததன் அடிப்படையில் ஆவியூர் மேல கண்மாய், கீழக்கண்மாய் நிரம்பி 75 ஆண்டுகளுக்கு பிறகு மறுகால் பாய்ந்தது.



Next Story