2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது- பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது


2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது- பட்ஜெட் மீதான விவாதம் நடக்கிறது
x

கோப்புப் படம் (பிடிஐ)

2 நாள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடுகிறது. பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடக்கிறது.

சென்னை,

தமிழக சட்டசபையில் கடந்த 20-ந்தேதி 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த நாள் (21-ந்தேதி) வேளாண்மை பட்ஜெட் தாக்கல் ஆனது. இந்த நிலையில், கடந்த 23-ந்தேதி முதல் பட்ஜெட் மீதான விவாதம் தொடங்கியது.

இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசி வருகிறார்கள். சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால், கடந்த 2 நாட்கள் சட்டசபைக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்த நிலையில், தமிழக சட்டசபையில் இன்று (திங்கட்கிழமை) பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடக்கிறது.

காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கேள்வி நேரம் முடிந்ததும் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான 3-வது நாள் விவாதம் நடக்கிறது. இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என மொத்தம் 8 பேர் பேச இருக்கிறார்கள்.சட்டசபையில் நாளை (செவ்வாய்கிழமை) 2023-2024-ம் ஆண்டின் செலவிற்கான முன்பண மானியக் கோரிக்கையும், 2022-2023-ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான மானியக் கோரிக்கையும் பேரவைக்கு அளிக்கப்பட்டு, விவாதமின்றி வாக்கெடுப்பு நடத்தப்படும். தொடர்ந்து, நிதி ஒதுக்க சட்ட மசோதா அறிமுகம் செய்து ஆய்வுக்கு பிறகு நிறைவேற்றப்படும்.

மேலும், 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் வேளாண்மை பட்ஜெட் மீதான விவாதத்துக்கு நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வேளாண்மை-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதில் அளித்து பேசுகின்றனர்.


Next Story