மது அருந்திவிட்டும், செல்போன் பேசியபடியும்பஸ்களை ஓட்டக்கூடாது-கலெக்டர் அறிவுரை
மது அருந்தி விட்டும் செல்போன் பேசியபடியும் வாகனங்களை இயக்கக்கூடாது என பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபோது டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
மது அருந்தி விட்டும் செல்போன் பேசியபடியும் வாகனங்களை இயக்கக்கூடாது என பள்ளி வாகனங்களை ஆய்வு செய்தபோது டிரைவர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
பள்ளி வாகனங்கள் ஆய்வு
ராணிப்பேட்டை முத்துக்கடையை அடுத்த ஆட்டோ நகர் பகுதியில், நேற்று வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் மூலம் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த வாகனங்களை ஆய்வு செய்யும் முகாம் நடந்தது.
இதனையொட்டி பள்ளி வாகனங்கள் அங்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக உள்ளதா, என்பதை ஆய்வு செய்யும் பணியை கலெக்டர் வளர்மதி, தொடங்கி வைத்தார்.
பஸ்களில் அவசர கால வழி கதவுகள் முறையாக உள்ளதா எனவும், முதலுதவி பெட்டிகள், தீயணைப்பு கருவிகள், ஜி.பி.ஆர்.எஸ். கருவிகள், வேகக் கட்டுப்பாட்டு கருவிகள் மேலும் வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் முன்புறமும் பின்புறமும் முறையாக இயங்குகிறதா எனவும், ஓட்டுனர்கள் அமருமிடம் தனியாக பிரிக்கப்பட்டு மற்றவர்கள் தொந்தரவு இல்லாமல் இருக்கும்படியும் உள்ளதா எனவும், பேருந்தில் மாணவர்கள் அமரும் இருக்கையின் கீழ் தரைத்தளம் சரியாக உள்ளதா எனவும், உடைப்பு போன்ற பிரச்சினைகள் உள்ளதா எனவும், ஆய்வு செய்யப்பட்டது.
அறிவுரை
அப்போது பள்ளி வாகனங்களை இயக்கும் டிரைவர், நடத்துனர்களுக்கு கலெக்டர் வளர்மதி அறிவுரை வழங்கி பேசியதாவது:-
பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு பள்ளி வாகனங்களில் தங்கள் பிள்ளைகளை ஓட்டுனர்களை நம்பி அனுப்பி வைக்கின்றனர். குழந்தைகளை பாதுகாப்பாக பள்ளிக்கு அழைத்து வந்து வீட்டில் சேர்ப்பதை உறுதி செய்வது ஒவ்வொரு ஓட்டுனரின் முக்கிய கடமையாகும். பஸ்சில் வரும் பிள்ளைகளின் பெற்றோர்களாக ஒவ்வொரு ஓட்டுனரும் நடத்துனரும் இருக்கின்றீர்கள் என்பதை உணர்ந்து வாகனங்களை பாதுகாப்பாக இயக்க வேண்டும்.
ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டும், செல்போன் பேசியபடியும், பேருந்துகளை ஓட்டக் கூடாது. பேருந்து ஓட்டும் பொழுது கைபேசிகளை பயன்படுத்தாமல் பேருந்து நின்ற பின்பு யன்படுத்துங்கள்.
ஓட்டுனர்களும், நடத்துனர்களும் பஸ்களின் பாதுகாப்பு, தரைத்தளம், இருக்கைகள் கண்ணாடிகள், பாதுகாப்பாக உள்ளதா என்பதை அவ்வப்போது ஆய்வு செய்து உறுதி செய்ய வேண்டும்.
வரும் ஆண்டில் விபத்து இல்லாத ஆண்டாக அமையும் வகையில் ஓட்டுனர்களும் நடத்துனர்களும் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாகவும் முறையாகவும் இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
ஒத்திகை
இந்த ஆய்வின்போது பொழுது தீயணைப்புத்துறையினர் தீ விபத்துக்கள் தடுப்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சியையும், விபத்துகளில் சிக்கியவர்களை மீட்பது குறித்த ஒத்திகையையும் செய்து காண்பித்தனர்.
நேற்று நடைபெற்ற ஆய்வின்போது, கலெக்டர் வளர்மதி, பஸ்களில் ஏறி, பாதுகாப்பு வசதிகள் குழந்தைகளுக்கு செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பாதுகாப்பு குறைபாடு உள்ள பேருந்துகளை சீரமைத்து மறுபடியும் ஆய்வு செய்யுமாறு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வு குறித்து வட்டார போக்குவரத்து அலுவலகம் தெரிவித்துள்ளதாவது:-
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 523 பள்ளி வாகனங்கள் உள்ளன. இவைகளில் ராணிப்பேட்டை வட்டாரத்தில் 348 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட உள்ளது. அதில் நேற்று 250 வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டதில், 23 வாகனங்களில் பாதுகாப்பு குறைபாடுகள் கண்டறியப்பட்டு மீண்டும் சீரமைக்க அனுப்பப்பட்டது. வரும் 23- ந் தேதி (செவ்வாய்க்கிழமை) அரக்கோணம் வட்டாரத்தில் 175 பேருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளது. இன்றும் எஞ்சியுள்ள வாகனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளது.இந்த ஆய்வுகளின் போது ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் ராமலிங்கம், மோட்டார் ஆய்வாளர்கள் சிவக்குமார், செங்குட்டுவேல், தீயணைப்பு நிலைய அலுவலர் விநாயகம் மற்றும் பலர் உடனிருந்தனர்.