நெல் அறுவடைக்கு பின் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம்


நெல் அறுவடைக்கு பின் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம்
x
தினத்தந்தி 9 Jan 2023 12:15 AM IST (Updated: 9 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெற நெல் அறுவடைக்கு பின் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து பயன்பெறலாம் என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் ஆலோசனை தெரிவித்துள்ளார்

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

39 ஆயிரம் ஹெக்டேர் நெல் சாகுபடி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இந்த ஆண்டு சம்பா பருவத்தில் விவசாயிகள் சுமார் 39 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்பொழுது மாவட்டத்தில் சம்பா மற்றும் பின் சம்பா நெற்பயிர்கள் முதிர்ச்சி மற்றும் வளா்ச்சி நிலையில் உள்ளன. விவசாயிகள் நெற்பயிர் சாகுபடி அறுவடைக்குப்பின் உளுந்து பயிர் சாகுபடி செய்து பயன்பெறலாம். நெல்லுக்குப்பின் பயறு சாகுபடி செய்வதால் விவசாயிகள் குறுகிய காலத்தில் இரட்டிப்பு வருமானம் பெற்று பயனடையலாம். பயறு வகைகள் பயிரிடுவதன் மூலம் மண்வளம் மேம்படுவதுடன் மண் அரிப்பை தடுக்கிறது. மேலும் மண்ணில் தழைச்சத்து நிலைபடுத்துதல், அங்கக கரிம சேர்ப்பு மூலம் மண்ணின் அமைப்பை மேம்படுத்துதல், கரையாத்தன்மை உடைய சத்துகளை திரட்டுதல் ஆகியவை பயறுவகை பயிர்களின் தனித்தன்மை ஆகும். எனவே மண்வளத்தை அதிகரிப்பதிலும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதிலும் பயறு வகை சாகுபடி இன்றியமையாத ஒன்றாக உள்ளது.

உரச்செலவு குறைகிறது

பயறுவகைப்பயிர்கள் ஒரு நாளில் சராசரியாக ஹெக்டேருக்கு 1 கிலோ வரை தழைச்சத்தை நிலைநிறுத்துகிறது. இவ்வாறு நிலைநிறுத்தப்படும் தழைச்சத்தில் மூன்றில் 2 பங்கு அடுத்து பயிரிடப்படும் பயிரினால் உபயோகிக்கப்படுவதால் உரச்செலவு பெருமளவில் குறைவதுடன் பயறுவகை செடிகளின் தழைகள் மண்ணில் மக்கி உரமாக மாறி மண்வளத்தை மேம்படுத்துகிறது.

பயறு வகைகளான உளுந்து பயிரை நெல், மக்காச்சோளம், மணிலா போன்ற பயிர்களில் வரப்பு பயிராகவும், ஊடுபயிராகவும் பயிரிடலாம். பயிர் சாகுபடிக்கு தேவையான விதைகள், நுண்ணூட்டம் உயிர் உரங்கள், உயிரி கட்டுப்பாட்டு காரணிகள், விதை நேர்த்தி போன்ற இடுபொருட்கள் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 50 சதவீத மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கும் வகையில் அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது.

மேலும் நெல்லுக்குப்பின் உளுந்து சாகுபடி திட்டத்தின் கீழ் ஏக்கருக்கு ரூ.400 வீதம் 8 கிலோ விதைக்கு மானியம் வழங்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இரட்டிப்பு வருமானம் பெற நெல் அறுவடைக்குப்பின் பயறுவகை பயிர்களை சாகுபடி செய்து பயனடையலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Related Tags :
Next Story