காவல்துறையின் பேச்சுவார்த்தைக்கு பின் உயிரிழந்த பிரியாவின் உடலை எடுத்துச் செல்ல போராட்டக்காரர்கள் ஒத்துழைப்பு


காவல்துறையின் பேச்சுவார்த்தைக்கு பின் உயிரிழந்த பிரியாவின் உடலை எடுத்துச் செல்ல போராட்டக்காரர்கள் ஒத்துழைப்பு அளித்துள்ளனர்.

சென்னை,

சென்னை, வியாசர்பாடி சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் கால்பந்து விளையாட்டில் கொண்ட ஈடுபாடு காரணமாக தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல சாதனைகள் படைந்து வந்தார். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துவந்த இவர், அங்கு கால்பந்து விளையாட்டில் பயிற்சியும் பெற்று வந்தார்.

சமீபத்தில் பயிற்ச்சியின் போது மாணவிக்கு காலில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் பரிசோதனை செய்துள்ளார். அப்போது அவருக்கு காலில் தசைப்பிடிப்பால் சவ்வு விலகி இருப்பது எக்ஸ்ரே மூலம் தெரியவந்தது. இதனை தொடர்ந்து மருத்துவர்களின் பரிந்துரைப்படி தனது வீட்டின் அருகே உள்ள கொளத்தூர் அரசு புறநகர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளார்.

அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், தசைப்பிடிப்புக்கு அறுவை சிகிச்சையும் செய்துள்ளனர். ஆனால் பிரியாவுக்கு காலில் வலி குறையவில்லை என்று கூறப்படுகின்றது. இதனால் சிகிச்சைக்காக மீண்டும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு மாணவிக்கு மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் செய்த பரிசேதனையில், காலில் தசைகள் அனைத்தும் அழுகக்கூடிய நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் பிரியாவின் காலை அகற்ற வேண்டும் என கூறி அவரது காலை மருத்துவர்கள் அகற்றினர்.

அதன் பின்னர் அவர் ராஜீவ் காந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வந்தார். இந்நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கால்பந்து வீரங்கனை பிரியா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்நிலையில், அந்த மாணவிக்குக் தவறான சிகிச்சை அளித்த மருத்துவர்களை பணியிடை நீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் அந்த மருத்துவர்கள் மீது உரிய நடவ்டிக்கை எடுக்கப்படும் எனவும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிவாரணமும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

உயிரிழந்த மாணவியின் உடலை பிரேத பரிசோதனை செய்து அவரது உடலை மாணவியின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அப்போது அங்கிருந்து வீராங்கனை பிரியாவின் நண்பர்கள் அவரது உடலை கொண்டு செல்லும் வாகனத்தின் முன் போராட்டத்தில் ஈடுபட்டு தவறுக்கு காரணமான மருத்துவரை கைது செய்ய வேண்டும் என முழக்கங்கள் எழுப்பினர்.

இதையடுத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின்னர் பிரியாவின் உடலை எடுத்துச் செல்ல போராட்டக்காரர்கள் ஒத்துழைப்பு. சென்னை, வியாசர்பாடியில் பிரியாவின் வீடு முன்பு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.


Next Story