கோடை விடுமுறைக்கு பிறகுதிங்கட்கிழமை பள்ளிக்கூடங்கள் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு திங்கட்கிழமை பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு இன்று (திங்கட்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. இதை தொடர்ந்து பள்ளிக்கூடங்களில் நடைபெற்ற தூய்மை மற்றும் மராமத்து பணிகளை துணை கலெக்டர் தலைமையிலான குழுவினர் ஆய்வு செய்தனர்.
கோடை விடுமுறை
தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து வழக்கமா ஜூன் மாதம் 1-ந் தேதி பள்ளிக்கூடங்கள் திறக்கப்படும். ஆனால் இந்த ஆண்டு கோடை வெயில் கடுமையாக மக்களை வாட்டி எடுத்ததால், பள்ளிக்கூடங்கள் திறப்பு 2 முறை தள்ளி வைக்கப்பட்டது. அதன்படி இன்று (திங்கட்கிழமை) 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும், நாளை மறுநாள் (புதன்கிழமை) 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் வகுப்புகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.
பள்ளிக்கூடம் திறப்பு
தூத்துக்குடி மாவட்டத்தில் 88 மேல்நிலைப்பள்ளிக்கூடங்கள், 524 தொடக்கப்பள்ளிக்கூடங்கள் உள்ளன. இந்த பள்ளிக்கூடங்களில் பஞ்சாயத்து, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள் உதவியோடு சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மாவட்டம் முழுவதும் ஒவ்வொரு தாலுகாவிலும் ஒரு துணை கலெக்டர் தலைமையிலான குழுவினர் மராமத்து மற்றும் தூய்மை பணியை கண்காணித்தனர். பள்ளிக்கூடங்களில் உள்ள வகுப்பறைகள், மேசைகள், இருக்கைகள், கழிப்பறைகள், குடிநீர் தொட்டிகள் ஆகியவை சுத்தம் செய்யப்பட்டு உள்ளன. பள்ளிக்கூடங்களில் உள்ள மின் அமைப்புகளையும் ஆய்வு செய்து பழுதுகள் சரி செய்யப்பட்டு உள்ளன.
இதனை தொடர்ந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட உள்ளன. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.