மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல்
கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மீண்டும் கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
கொப்பரை தேங்காய்
கிணத்துக்கடவு அருகே கோதவாடி பிரிவில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 2,500 டன் கொப்பரை கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் வழங்கி இருந்தது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் செப்டம்பர் மாதம் இறுதி வரை கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் கொப்பரை தேங்காய்களை ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் விற்பனை செய்து வந்தனர். அங்கு அரவை கொப்பரை ஒரு கிலோ 108 ரூபாய் 60 பைசாவிற்கு கொள்முதல் செய்யப்பட்டது.
இலக்கை எட்டியதால் நிறுத்தம்
வெளிமார்க்கெட் விலையை விட கூடுதல் விலை கிடைத்ததால் விவசாயிகள் ஆர்வம் காட்டினர். அங்கு நிர்ணயித்த 2,500 டன் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது. அதன்பிறகு கொப்பரை தேங்காய் கொள்முதல் நிறுத்தப்பட்டுவிட்டது.
இதுகுறித்து வேளாண் அதிகாரிகள் கூறும்போது, வெளி மார்க்கெட்டில் கொப்பரை தேங்காய் ஒரு கிலோ 75 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால், பெரும்பாலான விவசாயிகள் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு வந்தனர். இதனால் அரசு நிர்ணயித்த இலக்கை 6 மாதத்துக்கு பதிலாக 2½ மாதத்திலேயே எட்ட முடிந்தது. இலக்கு முடிந்ததால், கொள்முதல் நிறுத்தப்பட்டு உள்ளது என்றனர்.
மீண்டும் கொள்முதல்
கொப்பரை தேங்காய் விவசாயிகள் கூறியதாவது:-
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கொப்பரை தேங்காய் உற்பத்தி அதிகம் இருக்கும். இங்கு 6 மாதத்தில் 2,500 டன் கொள்முதல் செய்ய தமிழக அரசு ஒப்புதல் வழங்கியது. ஆனால் 2½ மாதத்தில் இலக்கு எட்டப்பட்டதால், கொள்முதல் நிறுத்தப்பட்டுவிட்டது. ஆனால் பொள்ளாச்சி, செஞ்சேரிமலை ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் இலக்கை எட்டாததால் கொள்முதல் தொடர்கிறது. அங்கு கொண்டு செல்ல கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே கிணத்துக்கடவில் மீண்டும் கொப்பரை கொள்முதலை தொடங்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.