மீண்டும் ஆட்டை கடித்து கொன்ற சிறுத்தை
குடியாத்தம் அருகே மீண்டும் ஆட்டை, சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
குடியாத்தம் அருகே மீண்டும் ஆட்டை, சிறுத்தை கடித்து கொன்ற சம்பவம் நடந்துள்ளது.
சிறுத்தை நடமாட்டம்
குடியாத்தம் வனச்சரகத்தில் உள்ள காப்புக் காட்டில் யானைகள், சிறுத்தைகள், மான்கள், கரடிகள், காட்டுப்பன்றிகள் ஏராளமாக உள்ளன. யானைகள் அடிக்கடி கூட்டமாக விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வந்தது. அதேபோல் சிறுத்தைகளும் வனப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் நுழைந்து ஆடு, மாடுகளை கொன்று வந்தது. சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் இல்லாமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.
குடியாத்தம் அடுத்த கல்லப்பாடி முதலியார் ஏரி வனப்பகுதியை ஒட்டியபடி தோனிகான் பட்டி உள்ளது. இங்கு வனப்பகுதியை ஒட்டி ஒரு சில விவசாயிகள் வசித்து வருகின்றனர். அவர்கள் ஆடு, மாடுகள் மேய்த்து வருகின்றனர். இவர்கள் வசிக்கும் சற்று தொலைவில் வன ஊழியர்கள் தங்கும் கொட்டகையும் உள்ளது.
இங்கு விவசாயிகள் தவமணி, கணபதி ஆகியோர் வீட்டு கொட்டகையில் கட்டி இருந்த ஆடு மற்றும் ஆட்டு குட்டி, கன்று குட்டியை இரண்டு மாதங்களுக்கு முன்பு சிறுத்தைகள் வனப்பகுதிக்கு இழுத்துச் சென்று தின்றுள்ளது. கடந்த வாரம் இதே தோனிகான் பட்டி பகுதியில் வசிக்கும் முனிரத்தினம் விவசா நிலத்தில்உள்ள வீட்டில் வளர்த்துவந்த நாயை சிறுத்தைகள் கடித்து கொன்றுள்ளது.
ஆட்டை கடித்து கொன்றது
இந்நிலையில் இதே கல்லப்பாடி தோனிகான் பட்டியில் வசிக்கும் கணபதி என்பவருடைய ஆட்டை பெரிய சிறுத்தை ஒன்று கவ்வி இழுத்துச் சென்றுள்ளது. ஆட்டின் அலறல் சத்தம் கேட்ட கணபதி குடும்பத்தினர் சென்று பார்த்தபோது சிறுத்தை ஒன்று ஆட்டை கவ்வி இழுத்துச்சென்றது தெரிய வந்தது. உடனே இவர்கள் கூச்சலிட்டு சத்தம் எழுப்பியதும் சிறுத்தை ஆட்டை விட்டு விட்டு ஓடிவிட்டது.
உடனடியாக அந்த ஆட்டை மீட்டு சிகிச்சை அளித்த நிலையில் நேற்று காலையில் அந்த ஆடு பரிதாபமாக இறந்து விட்டது. இந்த தொடர் சம்பவத்தால் தோனிகான்பட்டி பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மிகுந்த அச்சமடைந்து உள்ளனர்.