மது, புகையிலைக்கு எதிராகசைக்கிள் பந்தய வீரர்கள் விழிப்புணர்வு:தேனியில் மாலை அணிவித்து வரவேற்பு


மது, புகையிலைக்கு எதிராகசைக்கிள் பந்தய வீரர்கள் விழிப்புணர்வு:தேனியில் மாலை அணிவித்து வரவேற்பு
x
தினத்தந்தி 20 March 2023 6:45 PM GMT (Updated: 20 March 2023 6:47 PM GMT)

மது, புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தேனிக்கு வந்த சைக்கிள் பந்தய வீரர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது.

தேனி

தூத்துக்குடி மாவட்டம், குமாரரெட்டியார்புரம் பகுதியை சேர்ந்தவர் சூரியபிரகாஷ். பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். அவரும், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே மாலையிட்டான்பட்டியை சேர்ந்தவர் ரெங்கராஜன். பி.ஏ. ஆங்கில பட்டப்படிப்பு படித்துள்ளார். அவர்கள் இருவரும் சைக்கிள் பந்தய வீரர்கள். பந்தயம் மூலம் நண்பர்களாகினர். இருவரும் தமிழகம் முழுவதும் மது மற்றும் புகையிலை பழக்கத்துக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்ய திட்டமிட்டனர்.

அதன்படி சைக்கிளில் தமிழகத்தில் பல இடங்களுக்கு சென்று பிரசாரம் செய்து நேற்று முன்தினம் இரவு தேனிக்கு வந்தனர். நேற்று காலையில் தேனியில் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர். அவர்களை இந்து எழுச்சி முன்னணி மாவட்ட தலைவர் ராமராஜ், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் மாலை அணிவித்து வரவேற்றனர். பின்னர், சூரியபிரகாஷ், ரெங்கராஜன் ஆகியோர் கூறும்போது, 'கடந்த மாதம் 26-ந்தேதி நாங்கள் விழிப்புணர்வு பயணத்தை ராமநாதபுரத்தில் தொடங்கினோம். பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை எண்ணூர் சென்றோம். அங்கிருந்து திருத்தணி, வேலூர், கிருஷ்ணகிரி, ஓசூர், ஓத்தக்கோவில், ஊட்டி, மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளுக்கு சென்றோம்.

அங்கிருந்து தேனிக்கு வந்தோம். தேனியில் இருந்து உசிலம்பட்டி, ராஜபாளையம், தென்காசி, மார்த்தாண்டம், கன்னியாகுமரி, திருச்செந்தூர் வழியாக தூத்துக்குடியில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளோம். செல்லும் இடங்களில் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் கொடுத்தும், துண்டு பிரசுரங்களை ஆட்டோக்களில் ஒட்டியும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். இளைய தலைமுறையினர் எந்தவித தீய பழக்கத்துக்கும் அடிமையாகாமல், மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியதுபோன்று, நாட்டை வல்லரசாக்க பாடுபட வேண்டும் என்பதற்காக இந்த விழிப்புணர்வு பயணத்தை மேற்கொண்டுள்ளோம்' என்றனர்.


Related Tags :
Next Story