மத்திய அரசை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்தர்மபுரியில் 78 பேர் கைது


மத்திய அரசை கண்டித்துமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல்தர்மபுரியில் 78 பேர் கைது
x
தினத்தந்தி 8 Sept 2023 12:30 AM IST (Updated: 8 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 78 கைது செய்யப்பட்டனர்

தர்மபுரி

தர்மபுரி மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரியில் போராட்டத்தில் ஈடுபட்ட 78 பேர் கைது செய்யப்பட்டனர்.

மறியல் போராட்டம்

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தர்மபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்க வேண்டும். பெட்ரோல், டீசல் மீதான வரிகளை கட்டுப்படுத்த வேண்டும். விவசாய விளை பொருட்களுக்கு கட்டுப்படியான விலையை தீர்மானிக்க வேண்டும். பொது வினியோக திட்டத்தை பலப்படுத்த வேண்டும். கிராமப்புற மக்களின் வேலை உறுதிதிட்டத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வரி வலியுறுத்தியும் இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது.

தர்மபுரி ரெயில் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாநிலக்குழு உறுப்பினர் சிசுபாலன் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, முத்து, கிரைசா மேரி, விசுவநாதன், ஜோதிபாசு, ஒன்றிய செயலாளர்கள் தர்மபுரி கந்தசாமி, நல்லம்பள்ளி சின்னராஜ், காரிமங்கலம் ஜெயராமன், இண்டூர் ராஜா, மாவட்டக்குழு உறுப்பினர்கள் மல்லையன், குப்புசாமி, பூபதி, ஜெயா, எல்லப்பன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். தொடர்ந்து ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 20 பெண்கள் உள்பட 78 பேரை போலீசார் கைது செய்தனர்.

பாலக்கோடு, அரூர்

பாலக்கோடு இந்தியன் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் நாகராசன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் ராமச்சந்திரன், மாவட்டக்குழு உறுப்பினர் கவிதா ஆகியோர் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற கட்சியினரை போலீசார் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

அரூர் பாரத ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அர்சுனன், மல்லிகா, ஒன்றிய செயலாளர்கள் அரூர் குமார், மொரப்பூர் தங்கராஜ், பாப்பிரெட்டிப்பட்டி தனுசன், மாவட்டக்குழு உறுப்பினர் வஞ்சி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கட்சியினரை போலீசார் அப்புறப்படுத்தினர்.

பென்னாகரம்

பென்னாகரம் இந்தியன் வங்கி முன்பு மத்திய அரசை கண்டித்து நடைபெற்ற இந்த மறியல் போராட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை செயலாளர் ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்னசாமி, பென்னாகரம் பகுதிக்குழு செயலாளர் ரவி, பென்னாகரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் உள்ளிட்டோர் பேசினர். அப்போது கோஷங்கள் எழுப்பியவாறு கட்சியினர் இந்தியன் வங்கிக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்தபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து ஒகேனக்கல் சாலையில் அமர்ந்து கோஷங்களை எழுப்பினர். இதில் ஏரியூர் ஒன்றிய செயலாளர் முருகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் அன்பு, செல்லன், குமார், ராஜி, சிவா, சுதாபாரதி, சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story