விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டன


விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குகள்  மழைநீரில் அடித்து செல்லப்பட்டன
x

விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த அகல் விளக்குகள் மழைநீரில் அடித்து செல்லப்பட்டன

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தில் கார்த்திகை தீப விழாவையொட்டி விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த அகல் விளக்குகள் மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் வியாபாரிகள் வேதனை அடைந்தனர்.

தரைக்கடைகள்

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை முதல் விட்டு, விட்டு மழை பெய்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கிகாணப்பட்டன. தஞ்சையில் உள்ள மேலவீதி, தெற்கு வீதி, கீழராஜவீதியில் மழைநீர் வடிகால்கள் கட்டும் பணி நடைபெற்று வருவதால் தண்ணீர் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

இந்த நிலையில் தொடர்ந்து மழை பெய்ததால், மழைநீர், சாக்கடை நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது. கீழராஜவீதி பகுதியில் தண்ணீர் அதிக அளவில் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். நாளை கார்த்திகை தீப பண்டிகை கொண்டாட உள்ளததையொட்டி கீழராஜவீதி பகுதியில் ஏரளமான வியாபாரிகள் தரைக்கடையாக அகல் விளக்குகளை விற்பனை செய்து வந்தனர்.

நீரில் அடித்துச்செல்லப்பட்டன

இது தவிர இதர வியாபாரிகளும் சாலையோர கடைகள் அமைத்து பல்வேறு பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இந்நிலையில் இந்த தொடர்மழை காரணமாக சாலையில் வைத்து விற்பனை செய்யப்பட்ட அகல் விளக்குகள் மழை நீரில் அடித்து செல்லப்பட்டன. சாலையில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் குவித்து வைக்கப்பட்டு இருந்த அகல் விளக்குகளில் பெரும்பாலான விளக்குகள் அடித்துச்செல்லப்பட்டன.இதனால் குவித்து வைக்கப்பட்டு இருந்த இடத்தில் இருந்து சில மீட்டர் தூரம் வரை அகல் விளக்குகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த வியாபாரிகள் அகல்விளக்குகளை தேடி எடுத்து பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தினர்.

வாழ்வாதாரம் பாதிப்பு

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், விருத்தாசலம் பகுதியில் இருந்து இந்த அகல் விளக்குகளை வாங்கி வைத்து விற்பனை செய்து வந்தோம். மழையினால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளதோடு, ஏராளமான விளக்குகள் தண்ணீரில் அடித்துச்செல்லப்பட்டன. அதில் பாதி தான் சேகரிக்க முடிந்தது. இதனால் தங்களுடைய வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது என வேதனையுடன் கூறினர்.

தஞ்சையை அடுத்த பிருந்தாவனம் பகுதியில் மழைநீர் வடிகால் சரியாக தூர்வாரப்படாததால் தாழ்வான பகுதியில் உள்ள 2 வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.


Next Story