அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை


அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல தடை
x

காரையார் செல்லும் மலைப்பாதையில் சாலைப்பணி நடப்பதால், அகஸ்தியர் அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு செல்ல சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

திருநெல்வேலி

விக்கிரமசிங்கபுரம்:

மேற்கு தொடர்ச்சி மலையில் காரையார் அணை, சேர்வலாறு அணை, பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட சுற்றுலா தலங்களும், பழங்குடி இன மக்கள் வசித்து வரும் மயிலாறு காணி, அகஸ்தியர் காணி குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளும் உள்ளன. இந்த நிலையில் பாபநாசம் வனச்சோதனை சாவடியில் இருந்து காரையார் அணை வரை சுமார் 14 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலை சேதமடைந்து மோசமாக காணப்பட்டது. அந்த சாலையை சீரமைக்கும் பணி கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கியது.

இதையடுத்து நேற்று முதல் வருகிற 20-ந் தேதி வரை சாலை புதுப்பிக்கப்பட உள்ளது. இதனால் அந்த சாலையில் வருகிற 20-ந் தேதி வரை போக்குவரத்துக்கு அனுமதிக்க வேண்டாம் என போக்குவரத்து மற்றும் வனத்துறையினருக்கு நெடுஞ்சாலை துறையினர் தெரிவித்தனர். அதன்படி பாபநாசம் வனச்சோதனை சாவடிக்கு மேலே தனியார் வாகனங்கள் அனுமதிக்கப்படாததால், அகஸ்தியர் அருவி, காரையார் சொரிமுத்து அய்யனார் கோவில் உள்ளிட்ட பகுதிகளுக்கு பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளதாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எவ்வித முன்னறிவிப்பும் இன்றி சொரிமுத்து அய்யனார் கோவில், அகஸ்தியர் அருவி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மேலும் பிரசித்தி பெற்ற காரையார் சொரிமுத்து அய்யனார் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா வருகிற 28-ந் தேதி நடக்கிறது. அதற்காக வருகிற 17-ந் தேதி கால்நாட்டு விழா நடைபெறுகிறது. இதில் பக்தர்கள் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


Next Story