நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 6 பேர்


நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 6 பேர்
x

இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக வந்து நடுக்கடலில் 1-வது மணல் திட்டில் தவித்தனர். அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டனர்.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இலங்கையில் இருந்து மேலும் 6 பேர் அகதிகளாக வந்து நடுக்கடலில் 1-வது மணல் திட்டில் தவித்தனர். அவர்களை கடலோர காவல் படையினர் மீட்டனர்.

அகதிகளாக வருகை

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு வாழ முடியாமல் அவ்வப்போது தமிழகத்திற்கு அகதிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கை வவுனியா பகுதியை சேர்ந்த 2 குடும்பங்களை சேர்ந்த 6 பேர் நேற்றுமுன்தினம் இரவு பிளாஸ்டிக் படகு ஒன்றில் புறப்பட்டு தப்பிவந்து, தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 1-வது மணல் திட்டு பகுதியில் வந்து இறங்கினர்.

கடலோர காவல் படையினர் மீட்டனர்

இதுபற்றி நேற்று காலை தகவல் கிடைத்ததும் மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் கப்பல் மூலம் அந்த 6 பேரையும் மீட்டு அரிச்சல்முனை கடற்கரைக்கு அழைத்து வந்தனர்.

தொடர்ந்து கடலோர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட அவர்களை தங்கள் வாகனத்தில் ஏற்றி மண்டபம் கடலோர காவல் நிலையத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அந்த 6 பேரிடம் நடத்திய விசாரணையில் வவுனியா மாவட்டம் பாறையாளங்குளம் பகுதியை சேர்ந்த பாலசுகந்தன் (வயது 41), இவருடைய மனைவி அனுஜா, மகன்கள் பிரசன்னா, மேன லக்சன் என்பதும், இதேபோல் வவுனியா மாவட்டம் நெடுங்குளம் பகுதியை சேர்ந்த லிங்கேசுவரன் (38). இவருடைய மனைவி பிரதானிகை என்றும் தெரியவந்தது. இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காததாலும், வேலை இல்லாததாலும், படகோட்டிக்கு ஒரு நபருக்கு இலங்கை பணம் ரூ.2 லட்சம் வீதம் கொடுத்து தப்பி வந்ததாக தெரிவித்துள்ளனர். அகதிகளாக வந்த 6 ேபரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story