இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு


இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு
x
தினத்தந்தி 7 Oct 2022 6:30 PM GMT (Updated: 7 Oct 2022 6:31 PM GMT)

இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிருக்கு பயந்து கடலில் குதித்த இலங்கை வாலிபரின் கதி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

ராமநாதபுரம்

ராமேசுவரம்,

இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. உயிருக்கு பயந்து கடலில் குதித்த இலங்கை வாலிபரின் கதி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

பொருளாதார நெருக்கடி

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கிருந்து தமிழகத்திற்கு 150-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர்.

இந்த நிலையில் தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 5-வது மணல் திட்டு பகுதியில் அகதிகள் சிலர் தவிப்பதாக மீனவர்கள் கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதை தொடர்ந்து ராமேசுவரம் கடலோர போலீசார், தனுஷ்கோடியில் இருந்து மீனவர்கள் உதவியுடன் நாட்டுப்படகு மூலம் மணல் திட்டு பகுதிக்கு சென்று அங்கு தவித்த கைக்குழந்தை உள்பட 3 குழந்தைகள் உள்ள ஒரே குடும்பத்தினர் 5 பேரை படகில் ஏற்றி மீட்டு தனுஷ்கோடி அழைத்து வந்தனர். பின்னர் மண்டபம் கடலோர காவல் நிலையம் அழைத்து வந்தனர்.

விசாரணை

அவர்கள் இலங்கையில் இருந்து வந்த அகதிகள் என தெரியவந்தது. அவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர்.

மன்னார் தாழ்வாடி பகுதியை சேர்ந்த முகம்மது சப்ரின் (வயது 33), இவருடைய மனைவி ராதிகா (36) என்பதும், இவர்களுடைய குழந்தைகள் சகித் (7), சல்மா (4) மற்றும் சகின் என்ற 6 மாத குழந்தை என்பதும் தெரியவந்தது.

மணல் திட்டு

சப்ரின் இலங்கையில் டிரைவராக இருந்துள்ளார். மேலும் போலீசார் இவரிடம் நடத்திய விசாரணையில் முகமது சப்ரின் சில அதிர்ச்சி தகவல்களை தெரிவித்தார். அதன் விவரம் வருமாறு:-

கடந்த 5-ந்் தேதி மன்னார் தாழ்வாடி கடற்கரையில் இருந்து நான் எனது மனைவி, 3 குழந்தைகள் என 5 பேர் படகில் ஏறும் போது தனியாக ஒரு வாலிபரும் எங்கள் படகில் வந்தார். எங்களை 3 படகோட்டிகள் அழைத்து வந்தனர். 5-ந் தேதி அன்று இரவு தனுஷ்கோடி அருகே இந்திய கடல் பகுதியில் உள்ள 5-வது மணல் திட்டு பகுதியில் இறக்கிவிட்டு, படகோட்டிகள் 3 பேரும் இலங்கைக்கு திரும்பி சென்றுவிட்டனர்.

அந்த வாலிபர் மற்றும் எங்கள் குடும்பத்தினர் என மொத்தம் 6 பேரும் மணல் திட்டில் தவித்து வந்தோம். 6-ந் தேதி மதியம் மணல் திட்டு பகுதிக்கு இலங்கை கடற்படை கப்பல் வந்தது.

எங்களை நோக்கி வந்த இலங்கை கடற்படையினரை கையெடுத்து கும்பிட்டு காலில் விழுந்தோம். எங்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்ல வேண்டாம் என கெஞ்சினோம்..

துப்பாக்கிச்சூடு

அப்போது எங்களுடன் இருந்த வாலிபர் இலங்கை கடற்படையினரை கண்டதும் வேகமாக ஓடத் தொடங்கினார். அந்த நேரத்தில் இலங்கை கடற்படையினர் அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சத்தம் கேட்டது. உடனே மணல் திட்டில் இருந்து கடலில் குதித்து அந்த நபர் நீந்த தொடங்கினார்.

அதன் பின்னர் அவர் என்ன ஆனார்? என்று எங்களுக்கு தெரியவில்லை. நாங்கள் காலில் விழுந்து கெஞ்சியதால் இலங்கை கடற்படையினர் எங்களை விட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டனர்.

சிறிது நேரத்தில் இந்திய கடற்படை கப்பல் ஒன்று அங்கு வந்தது. நாங்கள் கையசைத்து பார்த்தோம். ஆனால், எங்களை கவனிக்காமல் சென்றுவிட்டது. தற்போது மீட்கப்பட்டு உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பரபரப்பு

ராமேசுவரம்-தனுஷ்கோடிக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் இடையே கடலுக்குள் மொத்தம் 13 மணல் திட்டுகள் உள்ளன. இதில் இந்திய கடல் பகுதி 6-வது மணல் திட்டுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் அகதிகள் தவித்த 5-வது மணல் திட்டு இந்திய கடல் எல்லை பகுதியாகும். அத்துமீறி இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்ததோடு மட்டுமல்லாமல், மணல் திட்டில் தவித்த வாலிபர் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு தீவிரமாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுபற்றி மத்திய-மாநில உளவு பிரிவு போலீசாரும் அரசுக்கு தகவல் அறிக்கை அனுப்பி உள்ளனர். அதே நேரத்தில் மணல் திட்டில் இருந்து கடலில் குதித்து தப்பிய நபரின் கதி என்னவானது? என்பது இன்னும் தெரியவில்லை. அவர் இலங்கையில் எந்த பகுதியை சேர்ந்தவர், எதற்காக தனுஷ்கோடி வர இருந்தார்? என்பது பற்றியும் விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.


Next Story