புதுக்கோட்டை தபால் நிலையத்தில் "அகவை 60 அஞ்சல் 20" சிறப்பு முகாம்
புதுக்கோட்டை தபால் நிலையத்தில் “அகவை 60 அஞ்சல் 20” சிறப்பு முகாம் நடைபெற்றது.
இந்திய 75-வது ஆண்டு விடுதலை பெருவிழாவை முன்னிட்டு மூத்த குடிமக்களை கவுரவிக்கும் விதமாக மத்திய அஞ்சல் மண்டலத்தில் "அகவை 60 அஞ்சல் 20" என்ற சிறப்பு முகாம் தொடங்கப்பட்டுள்ளது. அஞ்சலக சேமிப்பு வங்கியானது பலதரப்பட்ட மக்களுக்கு சேமிப்பு சேவையை 100 ஆண்டுகளுக்கு மேல் சிறப்பாக வழங்கி வருகிறது. வருங்கால வைப்பு நிதிகணக்கு, குறித்தகால வைப்புகணக்கு, தொடர்வைப்பு கணக்கு, மாதாந்திர வருவாய்கணக்கு, தேசிய சேமிப்பு பத்திரங்கள், பெண்குழந்தைகளுக்காக செல்வமகள் சேமிப்புக்கணக்கு ஆகிய பலதரபட்ட மக்களுக்கும் ஏற்றவாறு பல்வேறு சேமிப்பு கணக்குகள் உள்ளன. அப்படி மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக கணக்குதான், "மூத்தகுடிமக்கள் சேமிப்புகணக்கு". மத்திய அஞ்சல் மண்டலத்தில் 2022 மே மாதம் முடிவில் 61,800 மூத்தகுடி மக்கள் சேமிப்பு கணக்குகள் உள்ளன. இத்திட்டத்தின் பலன்கள் மேலும் பல மக்களை சென்றடைய குறிப்பாக கிராமபுறத்தில் உள்ள மக்களும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடைய "அகவை 60 அஞ்சல் 20" என்ற சிறப்பு முகாம் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் புதுக்கோட்டை அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தங்கமணி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் "அகவை 60 அஞ்சல் 20" இன் இலச்சினை (லோகோ) வெளியிட்டு இத்திட்டத்தை பற்றி விரிவாக பேசினார். மேலும் புதியதாக இக்கணக்கை தொடங்கியவர்களுக்கு பாஸ்புத்தகம் வழங்கப்பட்டது. இக்கணக்கின் மூலம் பலனடைந்தவர்கள் பலர் இக்கணக்கின் முக்கியத்துவத்தை பற்றி பேசினர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையத்திலும், ஜூலை 21 முதல் இந்த முகாம் நடைபெற உள்ளது. இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி அனைத்து மூத்த குடிமக்களும் இத்திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம்.