கருத்தரிப்பு சிகிச்சைக்கு வயது வரம்பு: குழந்தை பெற்றுக்கொள்ளும் தனி மனித உரிமையை பறிப்பதாக வழக்கு
செயற்கை கருத்தரிப்பு சிகிச்சைக்கு வயது வரம்பை நிர்ணயித்துள்ள சட்டப்பிரிவு, குழந்தை பெற்றுக்கொள்ளும் தனி மனித உரிமையை பறிக்கிறது என்று தொடரப்பட்ட வழக்குக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
எனக்கு கடந்த 2015-ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2 ஆண்டுகள் ஆகியும் எங்களுக்கு குழந்தை இல்லை. அதையடுத்து சேலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கடந்த 2017-ம் ஆண்டு முதல் செயற்கை கருத்தரிக்கும் சிசிச்சை மேற்கொண்டு வருகிறோம்.
இந்த நிலையில், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை பெறுவோருக்கு உச்சபட்ச வயது வரம்பை நிர்ணயித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, 21 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்குட்பட்ட பெண்களும், 21 வயதுக்கு மேற்பட்ட 55 வயதுக்குட்பட்ட ஆண்களும் மட்டுமே இந்த சிகிச்சையை பெற முடியும் என்று சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.
உரிமை பறிப்பு
இதை மீறி சிகிச்சை பெறுவோருக்கு தண்டனை வழங்கவும் இந்த சட்டத்திருத்தம் வகை செய்கிறது. கருத்தரிப்பு சிகிச்சை பெறுவதற்கு குறைந்தபட்ச வயது 21 என்று நிர்ணயம் செய்தது சட்டப்படி சரியானதுதான். ஆனால் அதிகபட்ச வயது 55 தான் என்று நிர்ணயம் செய்தது சட்டவிரோதமானது.
நம் நாட்டில் குழந்தை பெற்றுக்கொள்ள வயது தடை இல்லை. எந்த வயதிலும் குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம். அப்படி இருக்கும்போது, இந்த வயது வரம்பு என்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும்விதமாக உள்ளது. 55 வயதுக்கு மேல் மனைவியுடன் குழந்தை பெற்றுக்கொள்ளக்கூடாது என்று தடுப்பது, குழந்தை பெற்றுக்கொள்ளும் என்னுடைய உரிமையை பறிப்பதாகிவிடும்.
மறுபரிசீலனை
எனவே, கருத்தரிப்பு தொழில்நுட்ப ஒழுங்குமுறை சட்டத்தில் கடந்த 2021-ம் ஆண்டு சேர்க்கப்பட்டுள்ள 21 (ஜி) என்ற பிரிவை அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது, சட்டவிரோதமானது என்று அறிவித்து, அந்த பிரிவை ரத்துசெய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வக்கீல் எஸ்.பாரதிராஜன் ஆஜராகி, 'இந்த சட்டத்திருத்தம் 2022-ம் ஆண்டு ஜனவரி 25-ந்தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த கேரளா ஐகோர்ட்டு, இந்த சட்டப்பிரிவை மறுபரிசீலனை செய்ய மத்திய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த சட்டப்பிரிவு அமலுக்கு வருவதற்கு முன்பு கருத்தரிப்பு சிகிச்சை மேற்கொள்ள தொடங்கியவர்கள் தொடர்ந்து அந்த சிகிச்சை பெறவும் அனுமதி வழங்கியுள்ளது' என்று வாதிட்டார்.
தொடரலாம்
கேரளா ஐகோர்ட்டு உத்தரவை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், 'வயதை நிர்ணயம் செய்த சட்டப்பிரிவு அமலுக்கு வருவதற்கு முன்பே மனுதாரர் சிசிச்சை மேற்கொண்டுவருகிறார். எனவே அவர் தொடர்ந்து சிகிச்சை பெறலாம். இந்த வழக்குக்கு மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். விசாரணையை ஜூன் 3-வது வாரத்துக்கு தள்ளிவைக்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.