தேங்காய் உடைத்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கடந்த 1-ந்தேதி முதல் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் சிதறு தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடந்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக 19-வது நாளாக இடுவாய் பஸ் நிறுத்தம் பகுதியில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம், ஏர்முனை இளைஞர் அணி மற்றும் கோவை -திருப்பூர் மாவட்ட தென்னை விவசாயிகள் சார்பில் தேங்காய் உடைத்து ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியை தடுக்க கோரியும், கள்ளுக்குண்டான தடையை நீக்க கோரியும், சத்துணவு திட்டத்தில் தேங்காய்பால், தேங்காய் எண்ணெய் சேர்க்கக் கோரியும், அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயிலுக்கு பதிலாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பா.ஜ.கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத்தலைவர் சி.பி.சுப்பிரமணியம் தலைமை தாங்கினார். இடுவாய் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பரமசிவம், அ.தி.மு.க. பல்லடம் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் ஆர்.சென்னியப்பன், பா.ஜ.கட்சியின் திருப்பூர் வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் பிரிவு தலைவர் செல்வகுமார், பா.ஜ.கட்சியின் இடுவாய் பகுதி தலைவர் செகமலையப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் கே.பி.சண்முகசுந்தரம், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன், கட்சி சார்பற் தமிழக விவசாயிகள் சங்கத்தின் பல்லடம் ஒன்றிய செயலாளர் வேலுமணி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.