மண்டியிட்டு விவசாயிகள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் அவினாசி பாளையத்தில் நேற்று 14-வது நாளாக விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. நேற்றைய நிகழ்வில் கரைப்புதூர் கிராம மக்கள் பங்கேற்றனர். போராட்டத்திற்கு லோகநாதன் தலைமை தாங்கினார்.ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தராஜ், துணைத் தலைவர் சின்னச்சாமி, சண்முகவேல், ஜெகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உழவர்களின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க கோரி தரையில் மண்டி போட்டு உழவர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.விவசாயிகளின் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மங்கை வள்ளி கும்மி கலைக்குழுவின் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியர் சண்முகசுந்தரம், இணை ஆசிரியர்கள் ரத்தினசாமி, முத்துக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியை நடத்தினர். போராட்ட பந்தலுக்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் விடியல் சேகர், கரைப்புதூர் நடராஜ், திருப்பூர் வழக்கறிஞர் சங்க தலைவர் வக்கீல் சுமன், வக்கீல் முருகேசன் ஆகியோர் போராட்டத்திற்கு ஆதரவு தந்தனர். சுமார் 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.