அதிக மகசூல் தரும் புதிய ரக உளுந்து அறிமுகம்


அதிக மகசூல் தரும் புதிய ரக உளுந்து அறிமுகம்
x
திருப்பூர்


உடுமலை பகுதியில் அதிக மகசூல் தரக்கூடிய புதிய ரக உளுந்து அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விதைப்பண்ணையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

புதிய ரகம்

இந்தியாவில் உளுந்து, துவரை, தட்டை, மொச்சை, கொள்ளு போன்ற பயறுவகைப் பயிர்கள் சாகுபடி அதிக அளவில் மேற்கொள்ளப்படுகிறது.இதில் குறைந்த வாழ்நாள், குறைந்த நீர்த் தேவை, குறைந்த சாகுபடிச் செலவு மட்டுமல்லாமல் அதிக மகசூல், அதிக லாபம் மற்றும் அதிகத் தேவை ஆகிய காரணங்களால் உளுந்து சாகுபடியில் விவசாயிகள் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் பயறுவகைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் புதுப்புது ரகங்கள் வெளியிடப்படுகிறது.அதிக மகசூல், பூச்சி நோய் எதிர்ப்புத் திறன், மணிகளின் அளவு, அதிக காய் பிடிக்கும் திறன் உள்ளிட்ட காரணிகள் இதில் கருத்தில் கொள்ளப்படுகின்றன.அந்தவகையில் கடந்த ஆண்டு வம்பன் பயறு வகைப் பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தின் மூலம் வம்பன் 11 என்னும் புதிய ரக உளுந்து வெளியிடப்பட்டது.இந்த ரக உளுந்து விதைகளை உற்பத்தி செய்து விவசாயிகளுக்கு வழங்கும் நோக்கத்தில் உடுமலை வட்டாரம் ஆண்டியக்கவுண்டனூர் பகுதியில் விதைப் பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.இந்த விதைப்பண்ணையில் விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று உதவி இயக்குனர் மாரிமுத்து ஆய்வு செய்தார்.

மஞ்சள் தேமல் நோய்

அப்போது அவர் கூறியதாவது:-

'உலக அளவில் உளுந்து உற்பத்தி மற்றும் பயன்பாட்டில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் 11.94 மில்லியன் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 3.36 மில்லியன் மெட்ரிக் டன் உளுந்து உற்பத்தி செய்யப்படுகிறது. தமிழகத்தில் 10.63 லட்சம் ஏக்கர் பரப்பில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு 3.11 லட்சம் மெட்ரிக் டன் உளுந்து உற்பத்தி செய்யப்படுகிறது. உளுந்து சாகுபடியைப் பொறுத்தவரை மஞ்சள் தேமல் நோய் தாக்குதல் பெரும் பிரச்சினையாக இருக்கும்.ஆனால் 70 முதல் 75 நாள் வயதுடைய வம்பன் 11 ரகமானது மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்புத் திறன் உடையதாகும்.36 முதல் 40 செமீ உயரம் வளரும் இந்த ரகம் அதிக காய் பிடிப்புத் திறன் மற்றும் அதிக மணி எடை கொண்டது.சராசரியாக ஒரு ஏக்கருக்கு 380 கிலோ மகசூல் தரக்கூடியது. இதுவரை அதிக மகசூல் தரக்கூடிய உளுந்து ரகமாகக் கருதப்பட்ட வம்பன் 8 ரகத்தை விட 11.6சதவீத அதிக மகசூல் தரக்கூடியது. இது காரீப், ராபி ஆகிய அனைத்து பருவங்களுக்கும், மானாவாரி, இறவை ஆகிய அனைத்து நீர்ப்பாசன முறைகளுக்கும் ஏற்ற ரகமாகும்'என்று அவர் கூறினார். இந்த ஆய்வின் போது விதைச்சான்று அலுவலர் ஷர்மிளா, உதவி விதை அலுவலர் பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story