விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும்
புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயத்தில் அதிக லாபம் ஈட்ட முடியும் என்று தோட்டக்கலைத்துறை கருத்தரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசினார்.
கருத்தரங்கு
திருப்பூர் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை, தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் சார்பில் மா மற்றும் மரவள்ளி பயிர்கள் சாகுபடியில் புதிய தொழில் நுட்பங்கள் குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கு காங்கயத்தில் உள்ள திருமண மண்டபத்தில் நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன் தலைமை தாங்கினார்.
கருத்தரங்கை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்து பேசியதாவது:-
மா மற்றும் மரவள்ளி பயிர்கள் சாகுபடி, தென்னை சாகுபடி குறித்தும் அதில் ஏற்படக்கூடிய பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்தும் விளக்கமாக கூறப்பட்டுள்ளது. இந்த விவசாய கருத்தரங்கை ஒரு விவசாயியாக நான் தொடங்கி வைப்பதில் பெருமையடைகிறேன். பயிர்களுக்கு பல்வேறு நோய்கள் தாக்குகிற நேரத்தில் சம்பந்தப்பட்ட வேளாண்மைத்துறை அலுவலகங்கள் மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலர்களை சந்தித்து அதுகுறித்து விளக்கம் கேட்டு விவசாயிகள் தெரிந்துகொள்ள வேண்டும். பயிர்களை பாதுகாத்தால் தான் உணவு உற்பத்தியை பெருக்க முடியும்.
புதிய தொழில்நுட்பம்
தென்னை பயிர்கள் அதிகம் இருக்கக்கூடிய பகுதிக்கே சென்று நோய்க்கு தகுந்த மருந்தை பயன்படுத்தி நோயிலிருந்து காப்பாற்றக்கூடிய நடவடிக்கை எடுக்கலாம். விளைச்சலை அதிகப்படுத்தி உழைப்புக்கான ஊதியம் பெறுகிற ஒரு சூழ்நிலையை உருவாக்கிக்கொள்ளவும், மக்களுக்கான உணவுஉற்பத்தி செய்திட முடியும் என்கிற நம்பிக்கையில் இந்த கருத்தரங்கு நடத்தப்படுகிறது.
தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருகிறது. எல்லோருக்கும் எல்லாம் என்ற நம் முதல்-அமைச்சரின் வரிகளுக்கு ஏற்ப 1½ லட்சம் விவசாயிகளுக்கு ரூ.333 கோடி மானியத்தில் இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. வேளாண் துறையில் விவசாயிகளுக்கு தனியாக பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வாழ்வாதாரம் மேம்படுத்தப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் மூலமாக அதிக லாபம் ஈட்ட முடியும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
வேளாண் இடுபொருட்கள்
வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறையின் சார்பில் 8 விவசாயிகளுக்கு ரூ.5 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் வேளாண் இடுபொருட்கள் மற்றும் வேளாண் உபகரணங்களை அமைச்சர் வழங்கினார். கருத்தரங்கில் ரூபோர்ஸ் வெள்ளை ஈ தாக்குதல் குறித்து மஞ்சள் அட்டை பொறி வைத்து தடுப்பு முறைகள் குறித்தும், காண்டாமிருக வண்டு இனக்கவர்ச்சி பொறி வைத்து தடுப்பு குறித்தும் தென்னைக்கு தேவையானநுண்ணூட்ட சத்து குறித்தும் வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜமாணிக்கம் விரிவாக பேசினார்.
இதில் வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர் சண்முகசுந்தரம், துணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) மணிமேகலை, துணை இயக்குனர் (வேளாண்மை) சுருளியப்பன், பொங்கலூர் வேளாண்மை அறிவியல் நிலைய இணை பேராசிரியர் கலையரசன், உதவி பேராசிரியர் திலகம், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டல தலைவர் இல.பத்மநாபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.