எந்திரங்கள் மூலம் நெல்அறுவடை தீவிரம்


எந்திரங்கள் மூலம் நெல்அறுவடை தீவிரம்
x
திருப்பூர்


மடத்துக்குளம் வட்டாரத்தில் எந்திரங்கள் மூலம் நெல் அறுவடை செய்யும் பணிகள் தொடங்கியுள்ளது.

ஆயக்கட்டு பாசனம்

மடத்துக்குளத்தையடுத்த கணியூர், கடத்தூர், காரத்தொழுவு, கொழுமம், குமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் நெல் சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அமராவதி ஆற்றுப் பாசனத்தின் மூலம் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் கடந்த காலங்களில் ஆண்டுக்கு 3 போகம் விளைய வைத்துள்ளனர்.

ஆனால் நீர்ப்பற்றாக்குறை, போதிய விலையின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் படிப்படியாக குறைந்து தற்போது ஆண்டுக்கு ஒன்று அல்லது 2 போகம் நெல் விளைய வைக்கப்படுகிறது.

கடந்த ஆண்டில் மழைப்பொழிவு போதுமான அளவில் இருந்ததாலும், அமராவதி அணையின் நீர் இருப்பு திருப்திகரமாக இருந்ததாலும் விவசாயிகள் ஆர்வத்துடன் நெல் சாகுபடி மேற்கொண்டனர். நடப்பு பருவத்தில் தென்மேற்குப்பருவமழை மடத்துக்குளம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போதிய அளவில் பெய்யவில்லை.

ஆனால் அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதியான கேரள மாநிலத்தில் ஓரளவு மழை பெய்ததால் குறுகிய கால நெல் ரகங்களை சாகுபடி செய்துள்ளனர்.அந்தவகையில் சுமார் 2 ஆயிரத்து 200 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது கணியூர், சோழமாதேவி உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை தொடங்கியுள்ளது.

அறுவடை எந்திரம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:- நெல் சாகுபடி செய்வதற்கான உழவு, உரம், மருந்து, கூலி உள்ளிட்ட செலவினங்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

ஆனால் நெல்லுக்கான கொள்முதல் விலை பெரிய அளவில் உயர்வதில்லை. ஒரு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் வரை செலவு பிடிக்கிறது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு மகசூல் எடுக்க முடிவதில்லை.

கூலி ஆட்கள் பற்றாக்குறை அதிக அளவில் உள்ளதால் உழவு, விதைப்பு, மருந்து தெளித்தல், அறுவடை என அனைத்து பணிகளுக்கும் எந்திரங்களை நம்பியே இருக்க வேண்டிய நிலை உள்ளது.

தற்போதைய நவீன எந்திரங்கள் மூலம் அறுவடை செய்யும்போது வைக்கோல் அதிக அளவில் சேதமடைவதில்லை. வியாபாரிகள் நேரடியாக வயலிலிருந்து வைக்கோலை எந்திரங்கள் மூலம் கட்டி எடுத்துச் செல்கின்றனர்.

ஏக்கருக்கு ரூ.6500 வரை விலை கொடுத்து வைக்கோலை வாங்குகிறார்கள். மகசூல் குறையும்போது வைக்கோல் மட்டும் தான் லாபம் என்று சொல்லும் நிலையும் ஏற்படுகிறது.

இந்த பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் வியாபாரிகளிடமிருந்தே விதை நெல்லை கொள்முதல் செய்து, அவர்கள் மூலமே விற்பனை செய்து விடுகிறார்கள்.

குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளே கொள்முதல் மையங்களை நாடிச் செல்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story