ரேஷன்கடை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்


ரேஷன்கடை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்தம்
x

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:-

தஞ்சை மாவட்டத்தில் ரேஷன்கடை பணியாளர்கள் 3-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரேஷன்கடை ஊழியர்கள்

பொது வினியோகத்திட்டத்திற்கென தனித்துறை உருவாக்க வேண்டும். 5 மாதமாக நிறுத்தி வைக்கப்பட்ட 17 சதவீத அகவிலைப்படியையும் சேர்த்து அரசு பணியாளர்களுக்கு வழங்கக்கூடிய 31 சதவீத அகவிலைப்படியை, நியாய விலைக்கடை பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும். ஒரே மாதிரியான ஊதிய உயர்வு வழங்க வேண்டும்.

சரியான எடையில் தரமான பொருட்கள் அனைத்தும் பொட்டலமாக வழங்க வேண்டும். மாத இறுதி தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். கொரோனா நிவாரண பொருட்களுக்கும், பொங்கல் பரிசு தொகுப்புக்கும் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஓய்வுபெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் 3 நாள் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்து இருந்தனர்.

3-வது நாளாக போராட்டம்

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் கடந்த 7-ந்தேதி முதல் நியாய விலைக்கடை பணியாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று முன்தினம் 2-வது நாள் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். நேற்று 3-வதுநாளாக வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.

ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப்போராட்டத்தால் கடைகளுக்கு பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

406 கடைகள் மூடல்

இது குறித்து நியாய விலைக்கடை பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் ராமலிங்கம் கூறுகையில், "தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் 1,184 ரேஷன்கடைகள் உள்ளன. இதில் 886 கடைகள் நேற்று திறந்திருக்கவேண்டும். ஆனால் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக 406 கடைகள் திறக்கப்படவில்லை. 480 கடைகள் மட்டும் திறக்கப்பட்டு இருந்தன. "என்றார்.


Next Story