அக்னி வீரர்கள் சத்தியப் பிரமாணம்
குன்னூர் எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் அக்னி வீரர்கள் சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் சிறந்த வீரர்களுக்கு பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் பதக்கம் வழங்கினார்.
குன்னூர் அருகே வெலிங்டன் பேரக்ஸில் எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ரான் ரெஜிமெண்டல் சென்டர் ராணுவ பயிற்சி மையம் உள்ளது. இங்கு தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா போன்ற தென் மாநிலங்களில் தேர்வு பெற்ற இளைஞர்களுக்கு ராணுவ பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சியை முடித்த இளம் வீரர்கள் சத்தியப் பிரமாணம் எடுத்த பின்னர் எல்லை பகுதியில் பணிக்காக அனுப்பப்படுகிறார்கள்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அக்னி வீரர்கள் ராணுவ பயிற்சி திட்டத்தின் கீழ் இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் 31 வாரம் கடுமையான பயிற்சியை வெற்றிகரமாக முடித்தனர். இதையடுத்து எம்.ஆர்.சி. ராணுவ முகாமான நாகேஸ் பேரக்ஸில் அக்னி வீரர்களின் 2-வது அணி சத்தியப் பிரமாணம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அக்னிவீரர்களின் குடும்ப உறுப்பினர்கள், பயிற்றுவிப்பாளர் ஆசிரியர்கள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து விருந்தினர்கள் இந்த முக்கியமான நிகழ்வைக் காண திரண்டு வந்து அவர்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்காக அக்னி வீரர்களைப் பாராட்டினர்.
அணிவகுப்பை மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் கமாண்டன்ட் பிரிகேடியர் சுனில் குமார் யாதவ் பார்வையிட்டார். அப்போது அவர் சிறந்த வீரர்களுக்கு பதக்கம் வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இது அக்னிவீரர்களால் உள்வாங்கப்பட்ட பயிற்சி மற்றும் ஒழுக்கத்தின் உயர் தரத்தைக் குறிக்கிறது. மேலும், நிறுவனத்தின் எதிர்காலமாக விளங்கும் அக்னிவீரர்களுக்கு உயர்தர பயிற்சி அளிக்கப்பட்டு வரும் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் பயிற்றுனர்கள் மற்றும் பணியாளர்களை பாராட்டுகிறேன். என்றார்.
அக்னிவீரர்களின் பங்களிப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவை அங்கீகரித்து அவர்களின் பெற்றோருக்கு கவுரவ பதக்கங்களும் வழங்கப்பட்டன. உத்ரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தைச் சேர்ந்த அக்னிவீரர் லவ்கேராஜ் பன்வார்க்கு சிறந்த ஆட்சேர்ப்புக்கான விருது வழங்கப்பட்டது.