'அக்னிபத்' திட்டம்: தீர்க்கப்பட வேண்டிய சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினை - ப.சிதம்பரம் கருத்து


அக்னிபத் திட்டம்: தீர்க்கப்பட வேண்டிய சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினை - ப.சிதம்பரம் கருத்து
x
தினத்தந்தி 19 Jun 2022 9:55 AM IST (Updated: 19 Jun 2022 10:26 AM IST)
t-max-icont-min-icon

'அக்னிபத்' திட்டம் இன்று சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினையாக உருவாகி விட்டதாக ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

'அக்னிபத்' என்ற பெயரில் ராணுவத்துக்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின்படி, 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்த திட்டத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. திட்டத்தை உடனடியாக திரும்பப்பெறுமாறு மத்திய அரசை வலியுறுத்தியும் வருகின்றன.

மத்திய அரசின் அக்னிபத் திட்டம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது. இதை திரும்ப பெறக்கோரி பல்வேறு மாநிலங்களில் போராட்டம் வெடித்து உள்ளது.

இந்நிலையில் 'அக்னிபத்' திட்டம் இன்று சர்ச்சைக்குரிய அரசியல் பிரச்சினையாக உருவாகி விட்டதாக முன்னாள் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "'அக்னிபத்' திட்டம் ஓர் அரசியல் முடிவு. இன்று சர்சைக்குரிய அரசியல் பிரச்சினையாக உருவாகிவிட்டது. இதில் அரசுக்கு ஆதரவாக மாநில கவர்னர் கருத்துத் தெரிவிப்பது ஏற்புடையதல்ல.

மேலும், உள்நாட்டு சக்திகளும் வெளிநாட்டு சக்திகளும் இளைஞர்களுக்குத் தவறான வழியைக் காட்டுகிறார்கள் என்று சொல்வது அறவே ஏற்புடையதல்ல. இந்தப் பிரச்னைக்கு அமைதியான போராட்டம் மூலமாகவும் விரிவான விவாதம் மூலமாகவும் தான் தீர்வு காணவேண்டும். இந்த விவாதத்தில் ஒரு மாநில கவர்னர் பங்கேற்பதற்கு இடம் இல்லை" என்று அதில் ப,சிதம்பரம் பதிவிட்டுள்ளார்.



Next Story