ஊடுபயிராக பாக்கு சாகுபடி


ஊடுபயிராக பாக்கு சாகுபடி
x

போடிப்பட்டிஉடுமலை பகுதியில் வேலிப்பயிராக தேக்கு மற்றும் ஊடுபயிராக பாக்கு சாகுபடி செய்து தென்னை விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி அசத்தி வருகின்றனர்.

திருப்பூர்

போடிப்பட்டிஉடுமலை பகுதியில் வேலிப்பயிராக தேக்கு மற்றும் ஊடுபயிராக பாக்கு சாகுபடி செய்து தென்னை விவசாயிகள் கூடுதல் வருவாய் ஈட்டி அசத்தி வருகின்றனர்.

மரப்பயிர்கள் சாகுபடி

உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் தென்னை சாகுபடி பிரதானமாக உள்ளது. கூலி ஆட்கள் பற்றாக்குறையால் நெல், கரும்பு, காய்கறிகள் உள்ளிட்ட சாகுபடியைக் கைவிட்டு பல விவசாயிகள் தென்னை விவசாயத்துக்கு மாறி வருகின்றனர்.

அதேநேரத்தில் தேங்காய்க்கு போதிய விலை கிடைக்காத நிலையால் கூடுதல் வருமானம் ஈட்டும் வகையில் விவசாயிகள் திட்டமிட்டு செயல்பட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி தென்னையில் ஊடுபயிராக பாக்கு, வாழை, கோகோ, மக்காச்சோளம், சோளம், மல்பெரி மற்றும் காய்கறிகள் என்று பலவிதமான பயிர்களை சாகுபடி செய்து கூடுதல் வருவாய் ஈட்டும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

அதேநேரத்தில் இவற்றில் பெரும்பாலான பயிர்களுக்கு கூலி ஆட்கள் அதிக அளவில் தேவைப்படும் நிலை உள்ளது. எனவே மரப்பயிர்கள் சாகுபடி பல விவசாயிகளின் தேர்வாக உள்ளது. அதன்படி உடுமலை பகுதியில் ஒருசில விவசாயிகள் தென்னந்தோப்புகளில் வேலிப்பயிராக தேக்கு சாகுபடி செய்வதுடன் ஊடுபயிராக பாக்கு சாகுபடி செய்துள்ளனர்.

5 மடங்கு வருமானம்

இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நீண்ட காலப்பயிரான தேக்கு சாகுபடி குறிப்பிட்ட ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த வருவாய் தரக்கூடியது. இதனை வேலிப்பயிராக நடவு செய்யும் போது காற்றைக் கட்டுப்படுத்துகிறது. மேலும் தேக்கு மரத்திலிருந்து உதிரும் இலைகள் வயலுக்கு சிறந்த இயற்கை உரமாக மாறுகிறது.

ஊடுபயிராக பாக்கு சாகுபடி செய்யும் போது 3 முதல் 4 ஆண்டுகளில் பலன் தரத்தொடங்குகிறது.

20 முதல் 50 ஆண்டுகள் வரை பாக்கு மரங்களின் மூலம் வருவாய் ஈட்ட முடியும். பாக்கு மரங்களைப் பொறுத்தவரை தென்னையை விட 3 மடங்கு தண்ணீர் தேவைப்படும்.

அதே நேரத்தில் தென்னையை விட 5 மடங்கு வருமானம் தரக்கூடியதாக உள்ளது. விற்பனை வாய்ப்புகளும் அதிக அளவில் உள்ளது.

எனவே தென்னை சாகுபடியில் வேலிப்பயிராக தேக்கையும், ஊடுபயிராக பாக்கையும் பயிரிட்டுள்ளோம்.

இவ்வாறு விவசாயிகள் கூறினர்.


Related Tags :
Next Story