நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் உரம் மேலாண்மை பணி தீவிரம்


நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் உரம் மேலாண்மை பணி தீவிரம்
x

முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வரும் நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் உரம் மேலாண்மை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

திருப்பூர்

முத்தூர் கீழ்பவானி பாசன பகுதிகளில் கடந்த 4 மாதங்களாக நடைபெற்று வரும் நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் உரம் மேலாண்மை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

நஞ்சை சம்பா நெல் சாகுபடி

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு நஞ்சை சம்பா நெல் சாகுபடிக்காக கடந்த ஆகஸ்ட் மாதம் 12-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.

இதன்படி முதல் கட்டமாக கீழ்பவானி பாசன விவசாயிகள் ஐ.ஆர்.20, கோ 41,கோ 43, டீலக்ஸ் பொன்னி உட்பட பல்வேறு ரக விதை நெல் மணிகளை அரசு வேளாண்மை விரிவாக்க மையங்கள் மற்றும் தனியார் விதை நெல் விற்பனை நிலையங்களில் வாங்கி வந்து தங்களது வேளாண் வயல்களில் நெல் நாற்றுக்கள் உற்பத்தி செய்தனர்.

நெல் நடவு பணிகள்

இதனை தொடர்ந்து 2-ம் கட்டமாக நன்கு வளர்ந்து இருந்த நெல் நாற்றுக்கள் வயல்களில் இருந்து எடுக்கப்பட்டு சமன்படுத்தப்பட்ட தண்ணீர் நிரம்பிய வயல்களில் இயற்கை தொழு உரங்கள், மாற்று உரங்கள் இட்டு டிராக்டர் மூலம் சேற்று உழவு பணிகள் செய்யப்பட்டது.

அதன் பின்பு இப்பகுதிகளில் கடந்த அக்டோபர் மாதம் இறுதி வரை நெல் நடவு எந்திரம் மற்றும் உள்ளூர், வெளி மாவட்ட ஆண்கள், பெண்கள் அடங்கிய கூலி ஆட்கள் மூலம் நெல் நடவு பணிகள் நடைபெற்றன. இதனை தொடர்ந்து இப்பகுதிகளில் நெல் நாற்று நடவு பணிகள் முழுவீச்சில் தீவிரமாக நடைபெற்று கடந்த மாத தொடக்கத்தில் முற்றிலும் நிறைவு அடைந்தன. இதனைத் தொடர்ந்து முத்தூர் சுற்று வட்டார கீழ்பவானி பாசன பகுதிகளில் தற்போது நஞ்சை சம்பா நெல் நாற்றுக்கள் ஒரு மாத பயிராக நன்கு வளர்ந்து பச்சை, பசேல் என்று பசுமையாய் காட்சி அளிக்கின்றன.

இதனை தொடர்ந்து 3-ம் கட்டமாக கீழ்பவானி பாசன பகுதிகளில் தொடங்கப்பட்ட நஞ்சை சம்பா நெல் நாற்று நடவு பணியில் ஒற்றை நாற்று என்னும் திருந்திய நெல் சாகுபடியில் திரவை எந்திரம் மூலம் களை எடுக்கும் பணியும் மற்ற சாதாரண ரக நெல் நாற்று நடவு பணியில் எந்திரம் மற்றும் கூலி ஆட்கள் மூலம் களை மேலாண்மை பணியும் தொடங்கி நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து தற்போது நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் இப்பகுதி விவசாயிகள் உர மேலாண்மை பணியில் நெல் நாற்று பயிர்களுக்கு மேலுரம் இட்டு வருகின்றனர். இதன்படி நெல் நாற்று பயிர்களுக்கு புயல் மழைக்காலமான தற்போது நீர் மேலாண்மையுடன், நெல் சாகுபடி வயல்களில் உரங்கள் மேலே வீசி நெல் பயிர் வளர்ச்சியை அதிகப்படுத்தவும், கூடுதல் நெல்மணிகள் உருவாவதற்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

கூடுதல் வருமானம்

பவானிசாகர் அணையில் இருந்து முத்தூர் சுற்று வட்டார கிராம கீழ்பவானி பாசன பகுதிகளுக்கு ஆண்டு தோறும் ஆகஸ்ட் மாதத்தில் ஒற்றைப்படை, இரட்டைப்படை மதகுகளுக்கு திறக்கப்படும் தண்ணீர் நஞ்சை சம்பா நெல் சாகுபடியில் சாதாரண மற்றும் திருந்திய நெல் சாகுபடி செய்து வரும் விவசாயிகளுக்கு நல்ல கூடுதல் வருமானம் அளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story