குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள்
நெல் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
நெல் சாகுபடியில் குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
செயல் விளக்க நிகழ்ச்சி
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே உள்ள குன்னலூர் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை (அட்மா) மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டத்தின் சார்பில் நேரடி நெல் விதைப்பு கருவியின் மூலம் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு நெல் சாகுபடி செய்து, குறைந்த செலவில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் குறித்த செயல் விளக்க நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் வட்டார தொழில்நுட்ப மேலாளர் சுரேஷ்குமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம், உதவி வேளாண்மை அலுவலர் பிரசன்னா தேவி ஆகியோர் தலைமையில் பயனாளி ரெங்கசாமி மூலம் நேரடி நெல் விதைப்பு கருவியை கொண்டு பிற விவசாயிகளுக்கு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.
இது குறித்து வட்டார தொழில் நுட்ப மேலாளர் சுரேஷ்குமார் மற்றும் உதவி தொழில்நுட்ப மேலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கூறியதாவது:-
நேரடி நெல் விதைப்பு
நேரடி நெல் விதைப்பு கருவியின் மூலம் விதைப்பு செய்தால் குறைந்த செலவில் அதிக லாபம் பெறலாம். இந்த நெல் விதைப்பு கருவியை கொண்டு முதலாவதாக வயல்களை சமப்படுத்த வேண்டும். பின்பு உழவு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தண்ணீர் ஒரு சென்டி மீட்டர் என்ற அளவோடு ஏக்கர் ஒன்றுக்கு சிறிய ரகம் 8-10 கிலோ வீதமும், பெரிய ரகம் 10-12 கிலோ வீதமும் நெல் விதைகள் எடுத்துக்கொண்டு உயிர் உரங்களை கொண்டு விதை நேர்த்தி செய்ய வேண்டும். பின்னர் முளைத்த விதையுடன் விதைப்பு கருவியில் இட்டு இழுத்துச் செல்ல வேண்டும். பின்பு வெப்ப காலநிலையை கொண்டு காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் நிர்வாகம் செய்து கொள்ளலாம். சாதாரண கோனோ வீடர், பவர் கோனோ வீடர் கொண்டு களைகளை எளிய முறையில் அகற்றலாம்.
அதிக மகசூல்
இந்த நேரடி விதைப்பின் மூலம் பயிர்கள் குத்துகள் எண்ணிக்கை அதிகமாகும். சாதாரண முறையில் நாம் சாகுபடி செய்யும் போது அதிக செலவாகும். ஆனால் இந்த கருவியின் மூலம் குறைந்த செலவில் அதிக மகசூலை பெற முடியும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர். இதில் திரளான விவசாயிகள் பங்கேற்றனர்.