2-ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்


2-ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரம்
x

அமராவதி பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

திருப்பூர்

அமராவதி பகுதியில் 2-ம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அமராவதி ஆறு

உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலையில் உற்பத்தியாகின்ற நீராதாரங்களை கொண்டு அமராவதி அணை கட்டப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் கேரளா மாநில வனப்பகுதியில் உற்பத்தியாகும் சின்னாறு, தேனாறு, பாம்பாறு மற்றும் துணை ஆறுகள் மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்தை அளிக்கிறது. அதை ஆதாரமாகக்கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்திற்கு அமராவதி ஆறு மூலமாகவும், புதிய ஆயக்கட்டு பாசனத்திற்கு பிரதான கால்வாய் மூலமாகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டு வரப்படுகிறது. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை அடிப்படையாகக் கொண்டு குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

நெல் சாகுபடியில் தீவிரம்

இந்த நிலையில் நடப்பாண்டில் தென்மேற்கு பருவமழை நல்ல முறையில் அணைக்கு கை கொடுத்து உதவியது. இதன் காரணமாக ஏற்பட்ட நீர்வரத்தை ஆதாரமாகக் கொண்டு நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதைத் தொடர்ந்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரம் காட்டினார்கள். அதைத்தொடர்ந்து அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளியில் மழை பெய்து வந்தது. இதன் காரணமாக சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் நோய் தாக்குதலுக்கு உட்படாமல் நல்ல முறையில் வளர்ச்சி அடைந்து அறுவடையை எட்டியது.

இந்த சூழலில் வடகிழக்கு பருவமழையும் தீவிரமடைந்து விவசாயிகளுக்கு உதவியது. இதன் காரணமாக அணை சுமார் இரண்டு மாதங்களுக்கு மேலாக முழு கொள்ளளவில் நீடித்து வந்தது. அதைத்தொடர்ந்து இரண்டாம் ேபாக நெல் சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதையடுத்து விவசாயிகள் நாற்றங்கால் அமைத்தனர். பின்னர் எந்திரத்தின் உதவியுடன் உழவு பணியை மேற்கொண்டு நிலத்தை பயன்படுத்தியும் வருகின்றனர். இதன் காரணமாக கல்லாவரம் அமராவதி பகுதியில் உள்ள வயல்வெளிகள் எந்திரங்கள், மாடுகள் பூட்டிய கலப்பையுடன் பரபரப்பாக காணப்படுகிறது.

தண்ணீர் பற்றாக்குறை

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், அணையில் உள்ள நீர் இருப்பை ஆதாரமாகக்கொண்டு சாகுபடி பணியை தொடங்கி உள்ளோம். தற்போது நிலவுகின்ற வெப்பத்தின் காரணமாக அணைக்கு ஏற்பட்ட நீர் வரத்தும் முற்றிலுமாக குறைந்துவிட்டது. இதே நிலை நீடித்தால் நெற்பயிர்கள் அறுவடையை எட்டும் சூழலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே மீண்டும் மழை பெய்து நெல் சாகுபடிக்கு கை கொடுக்குமா? என்று எதிர்பார்ப்பில் உள்ளோம் என்றனர்.


1 More update

Related Tags :
Next Story