வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்


வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம்
x

மேக்களூரில் வேளாண் வளர்ச்சி திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

திருவண்ணாமலை

கீழ்பென்னாத்தூர்

கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த மேக்களூரில் கீழ்பென்னாத்தூர் வட்டாரத்தில் 11 கிராம பஞ்சாயத்துக்களில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், அனைத்து துறைகள் பங்கேற்ற சிறப்பு முகாம் நடந்தது.

மாவட்ட வேளாண் இணைஇயக்குனர் சி.அரகுமார் தலைமை தாங்கினார்.

கீழ்பென்னாத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குனர் சந்திரன் வேளாண் துறையின் திட்டங்கள் குறித்தும் அதை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்தும் விளக்கி கூறினார்.

கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) உமாபதி உயிர் உரங்கள் மற்றும் நுண்ணூட்ட சத்து பயன்படுத்துவது குறித்து விளக்கி கூறினார்.

மாவட்ட வேளாண் இணை இயக்குனர் அரகுமார் பேசுகையில், வேளாண்மை துறை மூலம் மானியவிலையில் இடுபொருட்கள் பெற உழவன் செயலி நடைமுறைப்படுத்தப்படுகிறது.

விவசாயிகள் இச்செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் திட்ட பயன்களை பெறலாம். சம்பாநெல் அறுவடைக்கு பின்னர் உளுந்து சாகுபடி செய்து குறைந்த நீரில் அதிக மகசூல் பெறலாம் என்றார்.

தொடர்ந்து இடுபொருட்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கினார்.

இதில் தோட்டக்கலை, வருவாய், ஊரகவளர்ச்சி, கால்நடை, வேளாண் பொறியியல், வேளாண்வணிகம், மீன்வளர்ச்சி ஆகிய துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டு அவரவர் துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கி கூறினர்.

முகாமில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டு பயன் அடைந்தனர்.

முடிவில் மேக்களூர் ஊராட்சி மன்ற தலைவர் கேசவன் நன்றி கூறினார்.

1 More update

Next Story