தட்கல் சிறப்பு திட்டத்தில் விவசாய மின் இணைப்பு
விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விண்ணப்பதாரர்களுக்கு தட்கல் சிறப்பு திட்டத்தில் முன்னுரிமையின் படி விவசாய மின் இணைப்பு வழங்கப்படுகிறது.
தேனி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி, விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் தமிழ்நாடு மின் உற்பத்தி கழகத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும், தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். எனவே, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள தேனி மாவட்ட விவசாயிகள் இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெறலாம். அதற்கு விவசாயிகள் தங்கள் பகுதிக்கான மின்வாரிய செயற்பொறியாளரை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.