விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள்
திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
திட்டச்சேரி:
திருச்செங்காட்டங்குடி ஊராட்சியில் விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்களை கலெக்டர் அருண்தம்புராஜ் வழங்கினார்.
இடுபொருட்கள் வழங்கும் விழா
திருமருகல் ஒன்றியம் திருச்செங்காட்டாங்குடி ஊராட்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட கிராமங்களில் இடுபொருட்கள் வழங்கும் விழா நடந்தது.
விழாவில் கலெக்டர் அருண்தம்புராஜ், முகமது ஷா நவாஸ் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு பயனாளிகளுக்கு வேளாண் இடுபொருட்களை வழங்கினார்.
விழாவில் கலெக்டர் கூறியதாவது:-
51 கிராம பஞ்சாயத்துகள்
கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் நடப்பாண்டில் நாகை மாவட்டத்தில் 51 கிராம பஞ்சாயத்துகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் கிராம ஊராட்சிகளில் தலா ஒரு குடும்பத்திற்கு 2 நெட்டை தென்னங்கன்றுகள் வீதம் 300 பண்ணைக் குடும்பங்களுக்கு 100 சதவீத மானிய விலையிலும், விசைத் தெளிப்பான்கள் தலா 9, 10 எண்கள் வீதம் ரூ.3 ஆயிரம் மானிய விலையிலும் மற்றும் திரவ உயிர் உரம் வினியோகம் 30 முதல் 35 வரை வழங்கப்பட உள்ளது.
80 சதவீதம்
மேலும் வேளாண்மை, உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் 80 சதவீதம் தேர்ந்தெடுக்கப்பட்டு கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் சிறு, குறு விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
இவ்விழாவில் திருமருகல் ஒன்றியக்குழு தலைவர் ராதாகிருட்டிணன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், ஜவகர், வேளாண்மை, உழவர் நலத்துறை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ், வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன், ஊராட்சி மன்ற தலைவர் வள்ளி கலியமூர்த்தி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளஞ்செழியன், மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.