தொழில் பூங்கா தொடங்க விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது


தொழில் பூங்கா தொடங்க விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது
x

தொழில் பூங்கா தொடங்க விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தக்கூடாது, என்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர்

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் கற்பகம் தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது ஆலத்தூர் தாலுகா, இரூர் கிராம விவசாயிகள் வந்து கலெக்டரிடம் கொடுத்த மனுவில், ஏற்கனவே சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு துப்பாக்கி தொழிற்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தியது. ஆனால் அந்த இடத்தில் துப்பாக்கி தொழிற்சாலை தொடங்கப்படவில்லை. மேலும் அந்த இடத்தில் வருவதாக தெரிவித்த தொழில் பூங்காவும் இதுவரை தொடங்கப்படவில்லை.

நிறுத்தி வைக்க வேண்டும்

இந்த நிலையில் தொழில் பூங்காவிற்கு கூடுதல் நிலம் தேவைப்படுவதாக கூறி எங்களது விவசாய விளை நிலங்களை கையகப்படுத்தப்படவுள்ளதாக தெரிகிறது. தொழில் பூங்கா தொடங்க மேலும் விவசாய விளை நிலங்களை கையகப்படுத்த கூடாது. அந்த நடவடிக்கையினை நிறுத்தி வைக்க வேண்டும், என்று கூறியிருந்தனர். குன்னம் தாலுகா கிழுமத்தூர் காலனி பொதுமக்கள் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட மனுவில், எங்கள் பகுதியில் புதிதாக தார் சாலை அமைக்கும் பணியை ஆக்கிரமிப்பு செய்த சிலர் தடுத்து வருகின்றனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி மின் விளக்குகளுடன் தார் சாலை அமைத்து தர வேண்டும். அத்தியூர் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், என்று கூறியிருந்தனர்.

மொத்தம் 503 மனுக்கள்

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மொத்தம் 503 மனுக்கள் பெறப்பட்டன. மேலும் கூட்டத்தில் கலெக்டர் கற்பகம் வருவாய்த்துறை சார்பில் 3 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டாவும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பெற்றோரின் ஓய்வூதியத்தினை தொடர்ந்து பெறும் வகையில் பாதுகாவலர் நியமன சான்றிதழினையும், ஒரு நபருக்கு காதொலி கருவியினையும் வழங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லலிதா, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) அருளாளன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் கார்த்திக்கேயன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி மற்றும் அனைத்து துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story