வேளாண் எந்திரங்கள், கருவிகள் மானியவிலையில் பெற விண்ணப்பிக்கலாம்


வேளாண் எந்திரங்கள், கருவிகள் மானியவிலையில் பெற விண்ணப்பிக்கலாம்
x
தினத்தந்தி 21 Oct 2022 6:45 PM GMT (Updated: 21 Oct 2022 6:47 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் மானிய விலையில் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்தார்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெண் விவசாயிகளுக்கு...

வேளாண்மை எந்திரமாக்கும் திட்டத்தின் கீழ் 2022-2023-ம் நடப்பு நிதியாண்டில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் எந்திரங்கள், கருவிகள் வழங்குதல், மானிய விலையில் வேளாண் எந்திரங்கள் மற்றும் துணை கருவிகள் வாடகைக்கு வழங்குதல் கிராம அளவிலான மையங்கள் அமைத்தல் முதலான பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி அதிகபட்சமாக டிராக்டர்களுக்கு ரூ.4 லட்சத்து 25 ஆயிரம், பவர்டில்லருக்கு ரூ.85 ஆயிரம், விசையால் களையெடுக்கும் கருவிகளுக்கு ரூ.35 ஆயிரம், ரோட்டாவேட்டர் என்று அழைக்க கூடிய சுழற்கலப்பைகளுக்கு ரூ.45 ஆயிரம், விதைப்பு கருவிகளுக்கு ரூ.24 ஆயிரம், நெல் அறுவடை எந்திரங்களுக்கு ரூ.11 லட்சம், பல்வகை பயிர் கதிரடிக்கும் எந்திரங்களுக்கு ரூ.2 லட்சத்து 5 ஆயிரம், வைக்கோல் கூட்டும் கருவிக்கு ரூ.5 லட்சத்து 50 ஆயிரம், விசைத்தெளிப்பான் கருவிகளுக்கு ரூ.3,100 அல்லது அவற்றின் மொத்த விலையில் 50 சதவீதம் இவற்றில் எது குறைவோ அத் தொகையை மானியமாக சிறு, குறு தாழ்த்தப்பட்ட பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

வாடகை மையங்கள்

இதர விவசாயிகளுக்கு அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகபட்ச மானியம் அல்லது மொத்த விலையில் 40 சதவிகிதம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. வேளாண் எந்திரமயமாக்கும் திட்டத்தில் தனிப்பட்ட வேளாண் எந்திரங்களை விவசாயிகள் மானியத்தில் பெற்றிட ஏதுவாக 6 டிராக்டர்கள், 14 பவர்டிலர்கள், 6 விசையால் களையெடுக்கும் கருவிகள், 6 ரோட்டாவேட்டர், 1 விதை மற்றும் உரம் தெளிக்கும் எந்திரம், 1 நெல் அறுவடை எந்திரம், 1 பல்வகை பயிர் கதிரடிக்கும் எந்திரம், 3 வைக்கோல் கட்டும் எந்திரங்கள், 2 விசை தெளிப்பான்கள் வாங்கிக் கொள்ள நடபாண்டில் ரூ.67 லட்சத்து 92 ஆயிரம், 2 கிராமிய அளவில் வாடகை மையங்கள் அமைக்க ரூ.16 லட்சம் வழங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தனிப்பட்ட விவசாயிகளுக்கு உரிய வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகளுக்கு வட்டார வாரியான இலக்குகள் உதவி செயற்பொறியாளர்களுக்கு அளிக்கப்படுகிறது. இதில் முன்னுரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வேளாண் எந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கிட மானியம் வழங்கப்படுவதால் விவசாயிகள் தாமாகவே முன்வந்து முன்னுரிமை அடிப்படையில் உதவி செயற்பொறியாளர், வேளாண் பொறியியல் துறை அலுவலகங்களில் பதிவு செய்து பயன்பெறலாம்.

தொடர்புடைய அலுவலர்கள்

கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், ரிஷிவந்தியம், தியாகதுருகம், வெள்ளிமலை, சின்னசேலம் வட்டார விவசாயிகள் உதவி செயற்பொறியாளர்(வேளாண்மை பொறியாளர்), வெற்றிவேல் காம்ப்ளக்ஸ், தச்சூர் கூட்டு ரோடு, தச்சூர், கள்ளக்குறிச்சி-606 202 அலுவலகத்தையும், 04151-291125 என்ற தொலைபேசி எண்ணிலும், திருக்கோவிலூர், திருநாவலூர் மற்றும் உளுந்தூர்பேட்டை தாலுகா விவசாயிகள் உதவி செயற்பொறியாளர் (வே.பொ), 45/72, பெரியார் தெரு, என்.ஜி.ஜி.ஒ.நகர், திருக்கோவிலூர்-605 757 அலுவலகத்தையும், (04153-253333) என்ற தொலைபேசி எண்ணிலும், தொடர்பு கொண்டு பயனடையலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story