ரூ.27 லட்சத்தில் வேளாண் எந்திரங்கள்


ரூ.27 லட்சத்தில் வேளாண் எந்திரங்கள்
x
தினத்தந்தி 1 Sep 2023 6:45 PM GMT (Updated: 1 Sep 2023 6:47 PM GMT)

கூட்டுறவு துறை சார்பில் 7 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரூ.27 லட்சத்தில் வேளாண் எந்திரங்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

மயிலாடுதுறை

கூட்டுறவு துறை சார்பில் 7 கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரூ.27 லட்சத்தில் வேளாண் எந்திரங்களை மாவட்ட கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

கடனுதவி

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை பல்நோக்கு சேவை சங்கங்களாக மாற்றம் செய்திடும் பொருட்டு, நபார்டு வங்கியினால் வேளாண் உபகரணங்கள் வாங்குவதற்கு மற்றும் வேளாண் கிடங்குகளை அமைப்பதற்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் மூலம் 7 ஆண்டுகள் தவணையில் 1 சதவீத வட்டியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் செயல்படும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 10 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வேளாண்மை உட்கட்டமைப்பு நிதியின் கீழ் வேளாண் உபகரணங்கள் வாங்க ரூ.77 லட்சத்து 32 ஆயிரம் நபார்டு வங்கியின் சார்பில் வழங்கப்பட்டுள்ளது.

வேளாண் எந்திரங்கள்

அதில் மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 7 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு ரூ.27 லட்சத்து 9 ஆயிரம் மதிப்பில் தொடக்க ேவளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு வேளாண் எந்திரங்களை கலெக்டர் மகாபாரதி வழங்கினார்.

இதில் மன்னம்பந்தல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.7 லட்சத்து 24 ஆயிரம் மதிப்பில் பொது வினியோகத்திட்ட நகர்வு வாகனமும், மூவலூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.3.13 லட்சம் மதிப்பில் வைக்கோல் கட்டும் எந்திரமும், நல்லாடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.2.32 லட்சம் மதிப்பில் பவர் டில்லரும் வழங்கப்பட்டது.

பவர் டில்லர்

செம்பனார்கோவில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.3.30 லட்சம் மதிப்பில் வைக்கோல் கட்டும் எந்திரமும், சேத்திரபாலபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.3.13 லட்சம் மதிப்பில் வைக்கோல் கட்டும் எந்திரமும், திருவிடைக்கழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.2.32 லட்சம் மதிப்பில் பவர் டில்லரும் வழங்கப்பட்டது.

மேலும் மேமாத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்கு ரூ.5.65 லட்சம் மதிப்பில் பொது வினியோக திட்ட நகர்வு வாகனமும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் மயிலாடுதுறை கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயகன் அமுல்ராஜ், இணை இயக்குனர் (வேளாண்மைத்துறை) சங்கர், நீர்வளத்துறை செயற்பொறியாளர் சண்முகம், நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் திருப்பதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயபால், சரக துணைப்பதிவாளர் ராஜேந்திரன் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், சங்கத்தின் செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


Next Story