படைப்புழு தாக்கிய மக்காச்சோள பயிரை வேளாண் அதிகாரிகள் ஆய்வு


படைப்புழு தாக்கிய மக்காச்சோள பயிரை வேளாண் அதிகாரிகள் ஆய்வு
x
தினத்தந்தி 8 Oct 2022 6:45 PM GMT (Updated: 8 Oct 2022 6:45 PM GMT)

தினத்தந்தி செய்தி எதிரொலி படைப்புழு தாக்கிய மக்காச்சோள பயிரை வேளாண் அதிகாரிகள் ஆய்வு விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மக்காச்சோளம் பயிரில் படைப்புழு தாக்குதலால் பயிர்கள் சேதம் ஏற்படுவதாகவும் எனவே வேளாண் அதிகாரிகள் பயிரை ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பான செய்தி-படம் தினத்தந்தியில் நேற்று முன்தினம் வெளியானது. இதையடுத்து சங்கராபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் புஷ்பராணி தலைமையிலான வேளாண் அதிகாரிகள் மேல்சிறுவள்ளூர், மைக்கேல்புரம், சவேரியார்பாளையம், ஈருடையாம்பட்டு ஆகிய பகுதிகளில் படைப்புழு தாக்கிய மக்காச்சோள பயிரை நேரில் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்கள்.

இது குறித்து அவர்கள் கூறும்போது, படைப்புழு தாக்குதலில் இருந்து மக்காச்சோள பயிர்களை பாதுகாத்து கொள்ள ஆரம்ப நிலை பயிர்களுக்கு ஒரு லிட்டர் தண்ணீரில் குளோரான்ட்ரானிலிப் ரோல் 18.5, மருந்து 0.4 மிலி, ப்ளூபெண்டிமைட் 0.5 மிலி, 15 முதல் 20 நாட்கள் ஆன பயிர்களுக்கு அசாடி ராக்ட்டின்(1,500 பி.பி.எம்.) 5 மிலி, 40 முதல் 50 நாட்களான பயிர்களுக்கு எமாமெக்டின் பென்சயோட் 0.4 கிராம், ஸ்பினிடிடோரம் 0.5 மிலி, நோவலூரான் 1 மிலி என ஏதேனும் ஒரு மருந்தை கலந்து மாலை வேளையில் பயிர்களின் வளர்ச்சி பருவத்துக்கு ஏற்ப தெளிக்க வேண்டும். இதன் மூலம் படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும். மேலும் உயிரியல் காரணிகளையும் மேற்கொள்ள வேண்டும். கோடை உழவு செய்தல், அடி உரமாக வேப்பம் புண்ணாக்கு ஏக்கருக்கு 100 கிலோ வீதம் இடுதல், அனைத்து விவசாயிகளும் ஒரே நேரத்தில் மக்காச்சோளம் பயிர் சாகுபடி செய்தல், பெவேரியா பேசியான என்ற உயிரியல் காரணியை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் கலந்து விதை நேர்த்தி செய்தல், மக்காச்சோளம் சாகுபடி செய்யும் வயலில் ஊடுபயிர் மற்றும் வரப்பு பயிராக உளுந்து, சாமந்திப்பூ தட்டைப்பயிறு சூரியகாந்தி ஆகியவற்றை பயிர் செய்தல், ஒரு ஹெக்டேருக்கு 12 எண்கள் இன கவர்ச்சி பொரி வைத்தல், முட்டை ஒட்டுண்ணி டிரைகோகிராமா ப்ரட்டியோசம் இடுதல், மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற உயிரியல் காரணியை ஒரு ஹெக்டேருக்கு 4 கிலோ விதம் 15 முதல் 20 நாட்களுக்கு மேல் தெளிப்பதன் மூலமாக ஆரம்ப நிலையிலேயே இந்த படைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்த முடியும் என்றனர். அப்போது துணை வேளாண்மை அலுவலர் காசி, உதவி விதை அலுவலர் முருகேசன், வேளாண்மை உதவிஅலுவலர் வெங்கடேசன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story