ஆணைகொம்பன் நோய் தாக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் ஆய்வு
‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக திருமருகல் அருகே ஆணை கொம்பன் நோய் தாக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
திட்டச்சேரி:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக திருமருகல் அருகே ஆணை கொம்பன் நோய் தாக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.
ஆணை கொம்பன் நோய்
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றிய பகுதிகளான திருமருகல், திருக்கண்ணபுரம், திருப்புகலூர், அம்பல், பொறக்குடி, ஏனங்குடி, எரவாஞ்சேரி, குத்தாலம், நரிமணம், கோட்டூர், வடகரை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மேட்டூர் அணையில் இருந்து முன்னதாக தண்ணீர் திறந்து விட்டதாலும், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் நெற்பயிர்கள் நன்கு வளர்ந்து பசுமையாக காணப்படுகிறது.
விவசாயிகள் கோரிக்கை
இந்த நிலையில் மேற்கண்ட கிராமங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களில் ஆணை கொம்பன் நோய், இலை சுருட்டு புழு, குலை நோய், அம்மை எனும் ஊதுபத்தி நோய் அறிகுறி அதிகளவில் காணப்படுகிறது. பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை வேளாண் துறை அதிகாரிகள் பார்வையிட்டு நோயை கட்டுப்படுத்த அறிவுரை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுதொடர்பாக செய்தி தினத்தந்தி நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் வெளியானது.
அதிகாரிகள் ஆய்வு
இதன் எதிரொலியாக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணை இயக்குனர் ஜாக்குலா அகண்டராவ், சிக்கல் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலைய பூச்சியியல் வல்லுனர் சந்திரசேகரன், திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் (பொறுப்பு) கலைச்செல்வன் ஆகியோர் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டு ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினர்.