ரூ.23 லட்சத்துக்கு வேளாண் பொருட்கள் ஏலம்
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் ரூ.23 லட்சத்துக்கு ஏலம் போனது.
ஒழுங்கு முறை விற்பனை கூடம்
சாலைப்புதூரில் வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலைக்காய் ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது. இதில் கரூர் ஒன்றியம், க.பரமத்தி ஒன்றியம் பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இங்கு நடைபெறும் ஏலத்தில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன முகவர்கள் கலந்து கொண்டு பொருட்களை வாங்கி செல்கின்றனர்.
அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 10.69 குவிண்டால் எடை கொண்ட 2 ஆயிரத்து 965 தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.27.59-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.23.25-க்கும், சராசரி விலையாக ரூ.26.79-க்கும் என மொத்தம் ரூ.28 ஆயிரத்து 63-க்கு விற்பனையானது.
தேங்காய் பருப்பு
அதேபோல் 284.32½ குவிண்டால் எடை கொண்ட 575 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.87.09-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.75.76-க்கும், சராசரி விலையாக ரூ.85.88-க்கும் விற்பனையானது. 2-ம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிகபட்ச விலையாக ரூ.83.89-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.61.90-க்கும், சராசரி விலையாக ரூ.75.39-க்கும் என மொத்தம் ரூ.21 லட்சத்து 83 ஆயிரத்து 144-க்கு விற்பனையானது.
நிலக்கடலை காய்
12.19 குவிண்டால் எடை கொண்ட 40 மூட்டை நிலக்கடலைக்காய் விற்பனைக்கு வந்தது. நிலக்கடலைக்காய் அதிகபட்ச விலையாக கிலோவுக்கு ரூ.75.29-க்கும், குறைந்தபட்ச விலையாக ரூ.71.20-க்கும், சராசரி விலையாக ரூ.75.20-க்கும் என மொத்தம் ரூ.85 ஆயிரத்து 698-க்கு விற்பனையானது.
சாலைப்புதூர் அரசு வேளாண் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் வேளாண் பொருட்கள் மொத்தம் ரூ.22 லட்சத்து 96 ஆயிரத்து 905-க்கு விற்பனையானது.