விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்தக்கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திட்டச்சேரி:
திட்டச்சேரி பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் ஸ்டாலின், மாவட்ட தலைவர் சித்தார்த்தன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் மாரிமுத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார். திட்டச்சேரி பேரூராட்சியில் 100 நாள் வேலை திட்டத்தை உடனே அமல்படுத்த வேண்டும். தைக்கால் தெரு, வாணியத்தெரு பகுதிகளுக்கு மயானம் மற்றும் சுடுகாடு சாலை அமைத்து தர வேண்டும். மரைக்கான்சாவடி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதை தொடர்ந்து திட்டச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக வந்து திட்டச்சேரி பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் வெங்கடேசனிடம் கோரிக்கை மனுக்களை வழங்கினர்.