விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Aug 2023 6:45 PM GMT (Updated: 22 Aug 2023 6:46 PM GMT)

நாகை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம்

திட்டச்சேரி:

நாகை மாவட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வீடற்ற அனைவருக்கும்...

திருமருகல் ஊராட்சி ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய துணை தலைவர் சிங்காரவேல், துணை செயலாளர் முருகுபாண்டியன், மாவட்ட துணை செயலாளர் துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஸ்டாலின் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகள் தலா ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்து, அரசு வீடு கட்டும் திட்டத்தில் வீடற்ற அனைவருக்கும் ரூ.10 லட்சத்தில் வீடு கட்டி வழங்க வேண்டும். அரசால் ஒதுக்கப்படும் நிதி முழுவதையும் கூலியாக கிடைக்கும் வகையில் பணிகளை தேர்வு செய்து செயல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டம்

இதில் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயபால், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் நீலமேகம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பாலு, காரல்மார்க்ஸ், மாவட்ட பொருளாளர் பொன்மணி, அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்க தலைவர் ஜோஸ்பின் ராணி, செயலாளர் விமலா, பொருளாளர் செல்வகுமாரி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் கீழையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய தலைவர் முருகையன் தலைமையிலும், வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் இளையப்பெருமாள் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல் நாகை வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிரில் விவசாய தொழிலாளர் சங்க தெற்கு ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் சித்தார்த்தன் ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.


Next Story