விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
செம்பனார்கோவிலில் விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருக்கடையூர்:
செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் 100 நாள் வேலையை முழுமையாக அமல்படுத்திடக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார், ஒன்றிய துணை செயலாளர் பாலகிருஷ்ணன், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட தலைவர் சிம்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் அமிர்தலிங்கம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் 100 நாள் வேலையை முழுமையாக அமல்படுத்திடவும், 100 நாள் வேலை சம்பளம் பாக்கியை உடனே வழங்கிடவும், 100 நாள் வேலையை 200 நாட்களாக அதிகரிக்கவும், தமிழ்நாட்டில் 37 மாவட்டங்களில் உள்ள பேரூராட்சிகளில் நிறுத்தப்பட்டுள்ள நகர்ப்புற வேலை திட்டத்தை செயல்படுத்திடவும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பேரூராட்சிகளில் நகர்ப்புற வேலை திட்டத்தை கொண்டு வர வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக செம்பனார்கோவில் மேல முக்கூட்டில் இருந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக வந்தனர். இதில் மாதர் சங்கத்தினர், விவசாய தொழிலாளர் சங்க பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.