தாமதமாக நெல் விவசாய பணிகள் தொடக்கம்


தாமதமாக நெல் விவசாய பணிகள் தொடக்கம்
x
தினத்தந்தி 30 Jan 2023 12:15 AM IST (Updated: 30 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் சக்கரக்கோட்டை கண்மாயில் உள்ள வைகை தண்ணீரை நம்பி விவசாயிகள் தாமதமாக நெல் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

ராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்த நிலையில் சக்கரக்கோட்டை கண்மாயில் உள்ள வைகை தண்ணீரை நம்பி விவசாயிகள் தாமதமாக நெல் விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர்.

பருவ மழை பொய்த்தது

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழை வழக்கமாக அக்டோபர் 20-ந் தேதி தொடங்கி நவம்பர், டிசம்பர் மாதங்களில் பெய்யும் நிலையில் இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியது. அந்த மழையும் ஒருசில நாட்கள் மட்டுமே பெய்த நிலையில் நின்றுவிட்டது. ஒருசில நாட்கள் பெய்த கனமழையும் பயனின்றி கடல்பகுதியில்தான் பெய்தது என்பது குறிப்பிடத்தக்கது. தொடக்கத்தில்தான் ஏமாற்றியது இறுதியில் கைகொடுக்கும் என்று நம்பிய நிலையிலும் ஏமாற்றமே மிஞ்சியது.

இதனால் மழையை நம்பி சுமார் ஒரு லட்சத்து 35 ஆயிரம் எக்டேரில் நெல் விவசாயம் செய்திருந்த விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மழையின்றி பல பகுதிகளில் பயிர்கள் கருகிவிட்டன. நெல்மணிகள் வரும் முன்னரே பயிர்கள் கருகியதால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது. மாவட்டத்தில் வைகை தண்ணீர் பாயாத பகுதிகளில் இந்த நிலை நிலவி வருகிறது. மாறாக வைகை தண்ணீர் பாயும் பகுதிகளில் நெற்பயிர்கள் நன்றாக வளர்ந்து நல்ல விளைச்சல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் பருவமழைக்கு முன்னதாகவே வைகை தண்ணீர் நீர்நிலைகளை நிரப்பியதாலும், வைகை உபரிநீர் வந்ததாலும் நீர்நிலைகள் நிரம்பி விவசாயத்திற்கு கைகொடுத்தது.

தாமதமாக தொடக்கம்

இந்நிலையில் ராமநாதபுரம் நகரின் 2-வது பெரிய கண்மாய் என்று அழைக்கப்படும் சக்கரக்கோட்டை கண்மாயில் தண்ணீர் நிறைவாக உள்ளது. பருவமழைக்கு முன்னதாக பெறப்பட்ட வைகை தண்ணீர் மற்றும் தற்போதைய தண்ணீர் ஆகியவற்றின் காரணமாக சக்கரக்கோட்டை கண்மாயில் தண்ணீர் நிறைந்து காணப்படுகிறது. இதன்காரணமாக இந்த ஆண்டு விவசாய பணிகளை தொடங்கலாமா என்று காத்திருந்த விவசாயிகள் கண்மாயில் உள்ள தண்ணீரை பார்த்து தாமதமாக விவசாய பணிகளை தொடங்கி உள்ளனர். சக்கரக்கோட்டை கண்மாயை சுற்றி உள்ள பகுதிகளில் உள்ள நிலங்களில் விவசாயிகள் தற்போது நிலங்களை உழுது விதைத்தும், நாற்றுநடும் பணியிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நெற்பயிர்கள் கருகி காட்சி அளிக்கும்நிலையில் சக்கரக்கோட்டை கண்மாய் சுற்றிய பகுதிகளில் பச்சைபசேல் என்று காட்சி அளிக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த விவசாயிகள், மழை இல்லாததால் விவசாய பணிகளை தொடங்காமல் தயங்கினோம். கண்மாயில் தொடர்ந்து தண்ணீர் உள்ளதால் அதனை நம்பி விவசாய பணிகளை தொடங்கி உள்ளோம் என்றனர்.


Next Story