ஆளில்லா விமானம் மூலம் நானோ யூரியா உரத்தை பயிர்களுக்கு தெளிப்பது குறித்து செயல்விளக்கம்


ஆளில்லா விமானம் மூலம் நானோ யூரியா உரத்தை பயிர்களுக்கு  தெளிப்பது குறித்து செயல்விளக்கம்
x

பவானிசாகரில் நானோ யூரியா உரத்தை ஆளில்லா விமானம் மூலம் பயிர்களுக்கு தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

ஈரோடு

பவானிசாகர்

பவானிசாகரில் நானோ யூரியா உரத்தை ஆளில்லா விமானம் மூலம் பயிர்களுக்கு தெளிப்பது குறித்து விவசாயிகளுக்கு செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.

செயல் விளக்கம்

மத்திய அரசின் இந்திய உழவர் உர கூட்டுறவு நிறுவனமான இப்கோ மூலம் திரவ வடிவிலான நானோ யூரியாவை கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடி நாட்டுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். இதைத்தொடர்ந்து நானோ யூரியா குறித்து விவசாயிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் இப்கோ உர நிறுவனம் இணைந்து வயல் விழா நிகழ்ச்சியை நடத்தியது. விழாவுக்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக இயற்கை வள மேலாண்மை மைய இயக்குனர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மண்ணியல் துறை பேராசிரியை சாந்தி, ஈரோடு வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, இப்கோ மாநில சந்தைப்படுத்துதல் மேலாளர் ஜெயராஜ் ஆகியோர் நானோ தொழில்நுட்பம் குறித்தும், நானோ யூரியா பயன்படுத்துவதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பேசினர். இதில் ஆளில்லா விமானத்தின் மூலம் நானோ யூரியா பயிர்களுக்கு தெளிப்பது குறித்து செயல்விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

தழைச்சத்து அளிக்கிறது

அனைத்து வகையான பயிர்களுக்கும் நானோ யூரியாவை பயன்படுத்தலாம். 500 மில்லி லிட்டர் நானோ யூரியா திரவம் ஒரு மூட்டை யூரியாவுக்கு இணையான பயனை அளிக்கிறது. நானோ யூரியா இலை வழியாக ஊடுருவி இலை முதல் வேர் வரைக்கும் சென்று தழைச்சத்தை அளிப்பதோடு மண் மற்றும் நீர் மாசடையாமல் சுற்றுச்சூழலை பாதுகாத்து மகசூலை அதிகரிக்கிறது என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் இப்கோ உர கூட்டுறவு நிறுவன அதிகாரிகள் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நானோ அறிவியல் தொழில்நுட்பத் துறை பேராசிரியரும், தலைவருமான சுப்பிரமணியன் வரவேற்றார். முடிவில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல் நன்றி கூறினார். விழாவுக்கான ஏற்பாடுகளை இப்கோ கள அலுவலர் வினோத் தலைமையில் செய்திருந்தனர்.


Next Story