மண்ணின் வளத்தை பாதுகாக்க உயிர் உரங்களை பயன்படுத்தலாம்- வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் தகவல்


மண்ணின் வளத்தை பாதுகாக்க உயிர் உரங்களை பயன்படுத்தலாம்- வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் தகவல்
x

மண்ணின் வளத்தை பாதுகாக்க உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் சரவணகுமார் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

ஈரோடு

மண்ணின் வளத்தை பாதுகாக்க உயிர் உரங்களை பயன்படுத்த வேண்டும் என்று ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் சரவணகுமார் தெரிவித்து உள்ளார்.

விதை நேர்த்தி

மண்ணின் வளத்தை நிர்ணயிப்பதில் நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும், மண்ணில் கரையாத நிலையில் உள்ள சத்துக்களை கரைத்து பயிருக்கு பயன்படும் விதமாக மாற்றுவதிலும் நுண்ணுயிர்கள் உதவி செய்கின்றன. தொடர் ரசாயன பயன்பாட்டின் காரணமாக மண்ணில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடுகிறது. நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகரிக்க உயிர் உரங்களை பயன்படுத்துவது மிக சிறந்த வழியாகும். நுண்ணுயிர் உரங்களை மண்ணில் இடுவதன் மூலம் ஊட்டச்சத்து தேவையை பூர்த்தி செய்வதுடன் கரிமசத்தை அதிகரிக்கலாம்.

எல்லா விதமான பயிர்களிலும், பயிர்களின் பல்வேறு வளர்ச்சி பருவத்திலும் நாம் உயிர் உரங்களை பயன்படுத்தலாம். பொதுவாக உயிர் உரங்களானது விதை நேர்த்தி, நாற்று நேர்த்தி, கரணை நேர்த்தி மற்றும் மண்ணில் இடுவதற்கு பரிந்துரைக்கப்படுகிறது. விதை நேர்த்தியானது அனைத்து வகையான உயிர் உரங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்ட ஒரு முறையாகும். சிறிய விதைகளாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு பரிந்துரைக்கப்பட்ட விதையுடன் 600 கிராமும், பெரிய விதைகளாக இருந்தால் ஒரு கிலோ உயிர் உரமும் தேவைப்படும். தேர்வு செய்யப்பட்ட உயிர் உரங்களை ஆறிய அரிசி கஞ்சியுடன் கலந்து பின்னர் விதைகளை நனைத்து 30 நிமிடம் ஊற வைத்து பின்பு விதைத்தல் வேண்டும். உயிர் உரங்களை கொண்டு விதை நேர்த்தி செய்த பின் ரசாயன பொருட்களை கொண்டு விதை நேர்த்தி செய்வதை தவிர்க்க வேண்டும்.

நாற்று நடவு

நாற்றுகளின் வேர்களை நனைத்தல் என்பது பொதுவாக நெல், புகையிலை மற்றும் காய்கறி பயிர்களான தக்காளி, கத்தரி, வெங்காயம், முட்டைகோஸ் மற்றும் காலிபிளவர் போன்ற பயிர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. ஒரு கிலோ உயிர் உரங்களுடன் 10 முதல் 15 லிட்டர் தண்ணீரை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். பின்னர் இந்த கலவையில் ஒரு ஹெக்டேருக்கு தேவையான தேர்வு செய்யப்பட்ட நாற்றுகளின் வேர்களை 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.

கரணை நேர்த்தி என்பது கரும்பு, உருளைகிழங்கு, வாழை போன்ற பயிர்களுக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இந்த முறைக்கு உயிர் உரங்கள் தோராயமாக 1:50 என்ற விகிதத்தில் அதாவது ஒரு கிலோ உயிர் உரத்துடன் 50 லிட்டர் தண்ணீர் கலந்து பயன்படுத்துதல் வேண்டும். இவ்வாறு தயார் செய்யப்பட்ட கலவையுடன் ஹெக்டேருக்கு தேர்வு செய்யப்பட்ட கரணைகளை நடவு செய்வதற்கு முன் 30 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பின்னர் நிழலில் உலர வைத்து நடவை மேற்கொள்ள வேண்டும்.

தொழு உரம்

உயிர் உரங்களை மண்ணில் இடுதல் என்பது பொதுவான முறைகளை பின்பற்ற முடியாத தருணத்தில், ஒரு ஹெக்டேருக்கு 2 கிலோ உயிர் உரத்தை 25 கிலோ தொழு உரம் அல்லது மணலுடன் கலந்து நடுவதற்கு 3 முதல் 7 நாட்களுக்கு முன்பு மண்ணில் இட வேண்டும். திரவ உயிர் உரங்களாக இருந்தால் விதை நேர்த்திக்கு ஒரு ஹெக்டேருக்கு தேவைப்படும் விதையும், 125 மில்லி உயிர் உரங்களை கொண்டு நேர்த்தி செய்ய வேண்டும். நாற்றுகளின் வேர்களை நனைப்பதற்கு 375 மில்லி உயிர் உரங்கள் பரிந்துரைக்கப்படுகிறது. நேரடியாக மண்ணில் இடுவதாக இருந்தால் ஒரு ஹெக்டேருக்கு 500 மில்லி உயிர் உரங்கள் தேவைப்படும். உயிர் உரங்களை உலர்ந்த, குளிர்ச்சியான இடங்களில் சேமித்து வைத்து பயன்படுத்த வேண்டும்.

இந்த தகவலை ஈரோடு மாவட்ட வேளாண் அறிவியல் நிலைய தொழில்நுட்ப வல்லுனர் சரவணகுமார் தெரிவித்து உள்ளார்.


Next Story