கோபி அருகே மாவட்ட அளவிலான நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டி


கோபி அருகே மாவட்ட அளவிலான நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டி
x

கோபி அருகே மாவட்ட அளவிலான நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டி

ஈரோடு

கோபி

ஈரோடு மாவட்ட அளவிலான நிலக்கடலை பயிர் விளைச்சல் போட்டி கோபி அருகே உள்ள கோட்டுப்புள்ளாம்பாளையத்தை சேர்ந்த குழந்தைவேல் என்பவரின் வயலில் நடந்தது. இதில் அவரது நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த "கதிரி 1812" ரக நிலக்கடலை பயிர் அறுவடை செய்யப்பட்டு, வயலில் கிடைக்கப்பெற்ற விளைச்சல் அளவிடப்பட்டது.

இப்போட்டியில் ஈரோடு வேளாண்மை துறை இயக்குனர் (உழவர் பயிற்சி நிலையம்) அ.நே.ஆசைத்தம்பி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) முருகேசன், பவானிசாகர் வேளாண்மை உதவி இயக்குனர் சரோஜா, விவசாயிகள் பிரதிநிதி விவேகானந்தன் நடுவர்களாக பங்கேற்றனர்.

அப்போது குழந்தைவடிவேல் கூறும்போது, 'கதிரி 1812 ரக நிலக்கடலையை கடந்த 3 ஆண்டுகளாக சாகுபடி செய்கிறேன். இது மற்ற ரகங்களை காட்டிலும் கூடுதல் விளைச்சல் தருகிறது. நிலக்கடலை பயிரை சொட்டு நீர் பாசன முறைகளில் சாகுபடி செய்து வருகிறேன். இது நிலக்கடலை பயிரில் கூடுதல் மகசூல் பெறுவதற்கு ஒரு முக்கியமான காரணம்' என்றார்.

இதேபோன்று நடப்பு நிதியாண்டில் ஈரோடு மாவட்ட அளவில் போட்டியில் பங்கேற்கும் விவசாயிகளின் மகசூலை கணக்கிட்டு அதில் அதிகபட்சமாக மகசூல் எடுக்கும் முதல் விவசாயிக்கு ரூ.15 ஆயிரமும், அடுத்த இடம் பிடிக்கும் விவசாயிக்கு ரூ.10 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இப்போட்டிக்கான ஏற்பாடுகளை கோபி வேளாண்மை உதவி இயக்குனர் முரளி, வேளாண்மை அலுவலர் சிவப்பிரகாசம் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் தமிழ்ச்செல்வன், வெங்கடாஜலம், குமார் ஆகியோர் செய்திருந்தனர்.


Next Story