மழை பெய்யாததால், தாளவாடி மலைப்பகுதியில் மக்காச்சோள பயிர்கள் காய்ந்து கருகும் நிலை- விவசாயிகள் வேதனை


மழை பெய்யாததால், தாளவாடி மலைப்பகுதியில் மக்காச்சோள பயிர்கள் காய்ந்து கருகும் நிலை- விவசாயிகள் வேதனை
x

மழை பெய்யாததால் மக்காச்சோள பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

ஈரோடு

தாளவாடி

மழை பெய்யாததால் மக்காச்சோள பயிர்கள் காய்ந்து கருகும் நிலை ஏற்பட்டு உள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில்...

தாளவாடி மலைப்பகுதியில் தாளவாடி திகினாரை, மல்லன்குழி, அருள்வாடி, கெட்டவாடி, பனக்கள்ளி, நெய்தாளபுரம், தலமலை, கோடிபுரம், ஆசனூர், குழியாடா, தேவர்நத்தம், கேர்மாளம், திங்களூர் என 100-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.

இந்த பகுதியில் ஆண்டு தோறும் ஆகஸ்டு மாதம் மானாவாரி நிலத்தில் மக்காசோளம் பயிரிடுவது வழக்கம். இதேபோல் இந்த ஆண்டும் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மக்காசோளம் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

இந்தநிலையில் நடவு செய்து 20 நாட்களுக்கு மேலாகியும் மழை பெய்யாததால் மக்காச்சோளம் பயிர் சில இடங்களில் முளைக்கவே இல்லை. முளைத்த பயிர்களும் மழை இல்லாமல் காய்ந்து கருகி வருகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.

காய்ந்து கருகி...

இதுகுறித்து தாளவாடி மலைப்பகுதி விவசாயிகள் கூறுகையில், 'தாளவாடி மலைப்பகுதியில் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் மானாவாரி நிலத்தில் மக்காச்சோளம் பயிரிடுவது வழக்கம். மழையை நம்பித்தான் நாங்கள் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்து வருகிறோம்.

இந்த ஆண்டு நல்ல மழை பெய்தது. இதனால் நிலத்தை உழவு செய்து மக்காச்சோளம் பயிர் செய்தோம். ஆனால் நடவு செய்த சில நாட்களில் இருந்து மழை பெய்யவில்லை. இதனால் மக்காச்சோள பயிர் காய்ந்து கருகி வருகிறது. மக்காச்சோளம் பயிரிட 1 ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு ஆகி உள்ளது. தற்போது மழை இல்லாததால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது,' என வேதனையுடன் தெரிவித்தனர்.


Next Story