ஈரோடு மாவட்டத்தில் 1,249 ஏக்கர் தரிசு நிலம் விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை; வேளாண்மை இணை இயக்குனர் தகவல்


ஈரோடு மாவட்டத்தில் 1,249 ஏக்கர் தரிசு நிலம் விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை; வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
x

ஈரோடு மாவட்டத்தில் 1,249 ஏக்கர் தரிசு நிலம் விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி தெரிவித்தார்.

ஈரோடு

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 1,249 ஏக்கர் தரிசு நிலம் விளை நிலங்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக வேளாண்மை இணை இயக்குனர் சின்னசாமி தெரிவித்தார்.

வேளாண் வளர்ச்சித்திட்டம்

தமிழக அரசின் சார்பில் அனைத்து கிராமங்களிலும் வேளாண்மை புரட்சியை ஏற்படுத்த கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு 60 கிராம ஊராட்சிகளும், 2022-23 ஆம் ஆண்டு 44 கிராம ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டது. அங்கு வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, நீர்வள ஆதார துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, எரிசக்தி துறை உள்ளிட்ட துறைகளின் திட்டங்களை ஒருங்கிணைத்து தன்னிறைவு பெற்ற கிராம ஊராட்சிகளாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஈரோடு தாலுகா மேட்டுநாசுவம்பாளையம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டு உள்ள தரிசு நிலத்தொகுப்பில் புதா்களை அகற்றும் பணியை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் சி.சின்னசாமி ெதாடங்கி வைத்தார்.

பயிர் சாகுபடி

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

கடந்த 2021-2022-ம் ஆண்டு 31 தரிசு நிலத்தொகுப்புகளில் நிலநீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு 11 கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் 9 இடங்களில் இலவச மின்சார இணைப்பு பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது. 2022-2023-ம் ஆண்டு 20 தரிசு நில தொகுப்புகள் கண்டறியப்பட்டு 13 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்கு வேளாண்மைத்துறை சார்பில் முட்செடிகள், புதர்கள் அப்புறப்படுத்தப்பட்டு பயிர் சாகுபடி செய்வதற்கு உகந்த நிலமாக மாற்றம் செய்யப்படுகிறது.

மேலும், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக நுண்ணீர் பாசனம் அமைக்கப்படுகிறது. தோட்டக்கலை பயிர்களில் நிலையான வருமானம் தரக்கூடிய பழப்பயிர்கள், காய்கறி தோட்டம், மரவகை செடிகளை நடவு செய்யலாம். ஆழ்துளை கிணற்றில் இருந்து தண்ணீர் எடுப்பதற்காக வேளாண் பொறியியல் துறை மூலமாக 10 எச்.பி. மின்மோட்டார் பொருத்தப்படுகிறது.

தடுப்பணைகள்

இலவச தென்னங்கன்றுகள், வரப்பு பயிராக உளுந்து சாகுபடிக்கு மானியமும் வழங்கப்படுகிறது. கைத்தெளிப்பான், விசைத்தெளிப்பான், தார்பாலின் ஆகியவையும், தோட்டக்கலைத்துறை மூலமாக வீட்டு தோட்டம் அமைக்க தழைகள், நெகிழி கூடைகள், பழச்செடிகள் ஆகியவையும் மானிய விலையில் வினியோகம் செய்யப்படுகிறது.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 100 சதவீத மானியத்தில் பண்ணைக்குட்டைகள், தடுப்பணைகள், மண் வரப்பு, கல் வரப்பு அமைத்து தண்ணீர் சேமிப்பு உள்கட்டமைப்பு வசதிகள் செய்து கொடுக்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை இந்த திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் ரூ.5 கோடியே 22 லட்சத்து 90 ஆயிரம் செலவிடப்பட்டு உள்ளது. இதன் மூலமாக 1,187 விவசாயிகள் பயன் அடைந்து உள்ளனர்.

தரிசு நிலம்

ஈரோடு மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித்திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 941 ஏக்கரும், நடப்பு ஆண்டில் 308 ஏக்கரும் தரிசு நிலங்கள் கண்டறியப்பட்டு உள்ளன. எனவே மொத்தம் 1,249 ஏக்கர் தரிசு நிலத்தையும் விளை நிலங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் ஈரோடு உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் அ.நே.ஆசைத்தம்பி, சென்னிமலை வேளாண்மை உதவி இயக்குனர் சாமுவேல், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் மனோகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story