நிலக்கடலை விவசாயம் பாதிப்பு


நிலக்கடலை விவசாயம் பாதிப்பு
x
தினத்தந்தி 7 Feb 2023 6:45 PM GMT (Updated: 7 Feb 2023 6:46 PM GMT)

மழை பெய்யாததால் சாயல்குடி அருகே பல கிராமங்களிலும் நிலக்கடலை விவசாயம் பாதிக்கப்பட்டு, விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ராமநாதபுரம்

சாயல்குடி,

மழை பெய்யாததால் சாயல்குடி அருகே பல கிராமங்களிலும் நிலக்கடலை விவசாயம் பாதிக்கப்பட்டு, விலை குறைந்ததால் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

நிலக்கடலை

சாயல்குடி அருகே மேலச்செல்வனூர், கடுகு சந்தை, சத்திரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம் என பல ஊர்களிலும் வேர்க்கடலை விவசாயம் செய்வதற்கான செம்மண் உள்ளது. அதனால் இந்த பகுதிகள் உள்ள செம்மண் நிலக்கடலை விவசாயம் செய்வதற்கு உகந்த பகுதியாக கருதப்படுகின்றது. ஆண்டு தோறும் நவம்பர் மாதத்தில் இப்பகுதிகளில் ஏர் உழுது நிலக்கடலை விதைகளை தூவி நிலக்கடலை விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்குவார்கள்.

அதன்படி கடந்த நவம்பர் மாதம் சாயல்குடி அருகே கடுகு சந்தை, சத்திரம், நரிப்பையூர், கன்னிராஜபுரம் உள்ளிட்ட பல கிராமங்களிலும் நிலக்கடலை சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினார்கள். தற்போது இந்த கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் நிலக்கடலையை அறுவடை செய்து அதை காய வைத்து வியாபாரிகளிடம் கொடுத்து வெளியூர்களுக்கு அனுப்பும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

விலை குறைவு

இது குறித்து சத்திரம் கிராமத்தில் உள்ள வேர்க்கடலை விவசாயி அழகு வள்ளி கூறியதாவது, இந்த ஆண்டு பருவமழை சீசனில் மழையே இல்லாததால் நிலக்கடலை விவசாயம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலக்கடலை செடிகளில் கடலையில் நல்ல விளைச்சல் இல்லாமல் வேர்க்கடலைக்குள் பருப்புகள் நல்ல திண்ணமாக இல்லாமல் லேசாகவே உள்ளன. கடந்த ஆண்டு ஒரு கிலோ நிலக்கடலை ரூ.60 வரை விலை போனது. ஆனால் இந்த ஆண்டு விளைச்சல் இல்லாததால் ஒரு கிலோ ரூ.40-க்கு மட்டுமே விலை போகிறது. இப்பகுதிகளில் அறுவடை செய்யப்படும் நிலக்கடலை கோவில்பட்டி, கழுகுமலை உள்ளிட்ட பல்வேறு ஊர்களுக்கும் வியாபாரிகள் மூலம் அனுப்பப்படுகின்றன. இந்த ஆண்டு 15 ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்திருந்தேன். ஒரு ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் வரை செலவாகியது. ஆனால் மழை இல்லாததால் விவசாயம் பாதிக்கப்பட்டது. மேலும் நிலக்கடலைக்கும் அரசே நல்ல விலை நிர்ணயம் செய்தால் வரவேற்பாக இருக்கும் என்றார்.


Next Story