தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெறலாம்
விழுப்புரம் மாவட்டத்தில் தட்கல் முறையில் விவசாய மின் இணைப்பு பெறலாம் என்று விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்:
விழுப்புரம் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் ஆணைப்படி விவசாய மின் இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் உள்ள விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் விரைந்து விவசாய மின் இணைப்பு பெறும் வகையில் விரைவு (தட்கல்) மின் இணைப்பு வழங்கல் திட்டம் 2017 முதல் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தினால் நடைமுறைபடுத்தப்பட்டு விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.
தட்கல் முறையில் ஏற்கனவே பதிவு செய்துள்ள விவசாயிகளுக்கும் மற்றும் தற்போது தட்கல் முறையில் பதிவு செய்யும் விவசாயிகளுக்கும் முன்னுரிமை அடிப்படையில் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
விவசாயிகள் பயன்பெறலாம்
எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் ஏற்கனவே விவசாய மின் இணைப்பு கோரி பதிவு செய்துள்ள விருப்பமுள்ள விவசாயிகள், இந்த தட்கல் சிறப்பு திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்பு பெற தங்கள் பகுதி செயற்பொறியாளரை (இயக்குதல் மற்றும் பராமரித்தல்) தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.