வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க மானியம்
வேளாண் பட்டதாரிகள் தொழில் தொடங்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மானியம்
வேளாண்மையில் பட்டப்படிப்பு முடித்த இளைஞர்களை கொண்டு, வளர்ந்து வரும் தொழில்நுட்ப அறிவை வேளாண்மையில் ஈடுபடுத்தி வேளாண்மையை வளர்ச்சி அடைய செய்யும் நோக்கத்தில் இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோர் ஆக்குதல் திட்டம் கடந்த 2021-22-ம்ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
2023-24-ம் நிதி ஆண்டில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில் தொடங்க பட்டதாரி ஒருவருக்கு 50 சதவீத மானியம் அதிகபட்சமாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.
21 முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும். வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் (குறைத்தபட்சம் இளநிலை பட்டப்படிப்பு) முடித்திருக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களை https://agrinfra.dac.gov.in, https://pmfme.mofpi.gov.in ஆகிய இணைய தள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
ஆவணங்கள்
10 மற்றும் 12-ம் வகுப்பு, பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை, பயனாளியின் வங்கி கணக்கு புத்தகம், வங்கியிடம் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணத்துடன், வேளாண் பட்டதாரிகள் AGRISNET இணையதளத்தில் 31.8.23-க்குள் விண்ணப்பித்து, அதன் நகலை தேவையான ஆவணங்களோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.