இடிந்து விழும் நிலையில் வேளாண் அலுவலகம்


இடிந்து விழும் நிலையில் வேளாண் அலுவலகம்
x
தினத்தந்தி 24 Jan 2023 12:15 AM IST (Updated: 24 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

ஆனைமலையில் இடிந்து விழும் நிலையில் வேளாண் அலுவலகம் உள்ளது. இதற்கு புதிய கட்டிடம் கட்டப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

கோயம்புத்தூர்

ஆனைமலை ஒன்றியத்தில் 23 ஆயிரம் ஏக்கரில் தென்னை, 5 ஆயிரத்து 400 ஏக்கரில் நெல், 1,000 ஏக்கரில் பந்தல் காய்கறி விவசாயம் நடைபெறுகிறது.

50 ஆண்டுகளுக்கு முன்பு...

இந்த நிலையில் மத்திய-மாநில அரசுகளின் மானிய திட்டங்கள், இடுபொருட்கள் மற்றும் விதைகளின் தேர்வு குறித்து விவசாயிகள் அறிந்துகொள்ள ஆனைமலை ஒன்றிய அலுவலக வளாகத்தில் கடந்த 1970-ம் ஆண்டு ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையம் கட்டப்பட்டது. அதில் வேளாண் துறை மற்றும் தோட்டக்கலைத்துறை அலுவலகங்களும் செயல்பட்டு வந்தன.

இந்த கட்டிடம் கட்டப்பட்டு 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது. குறிப்பாக வேளாண் அலுவலகம் செயல்படும் கட்டிடத்தின் மேற்கூரையில் செடிகள் முளைத்து, கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் வகையில் காணப்படுகின்றன. மேலும் மேற்கூரையில் விரிசல் ஏற்பட்டு உள்ளதால், அதன் வழியாக மழைநீர் அலுவலகத்துக்குள் வழிந்தோடுகிறது. இதனால் அங்கு பணியாற்றும் அலுவலர்கள் மற்றும் சேவைக்காக வரும் விவசாயிகள் சிரமம் அடைகின்றனர். இதனால் வேளாண் அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

வீண் அலைச்சல்

இதை ஏற்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட ரூ.2 கோடியே 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் கட்டிடம் கட்டி முடிக்கும் வரை வேளாண் அலுவலகம் செயல்பட மாற்று கட்டிடம் தேவைப்பட்டது. ஆனால் மாற்று கட்டிடம் கிடைக்கவில்லை. இதனால் புதிய கட்டிடம் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டது. மேலும் ஒதுக்கிய நிதியும் திரும்பி சென்றது. இதனால் இடிந்து விழும் நிலையில் உள்ள அந்த பழைய கட்டிடத்திலேயே அலுவலர்களும், விவசாயிகளும் அவதியடையும் நிலை தொடர்கிறது. இதுகுறித்து ஆனைமலை பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறிய கருத்துகள் வருமாறு:-

செல்வ கண்ணன்(ஆனைமலை):

வேளாண் அலுவலகம் பழுதடைந்து உள்ளதால், அங்கு கூட்டங்கள் நடத்த முடியாத நிலை உள்ளது. இதற்கு அந்தந்த கிராமங்களில் உள்ள தோட்டங்களுக்கு செல்ல வேண்டி உள்ளதால், வீண் அலைச்சல் ஏற்படுகிறது.

மாற்று கட்டிடம் கிடைக்காத காரணத்தால், பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட ஒதுக்கிய நிதியும் திரும்பி சென்றது. அதன்பிறகு மீண்டும் விடுத்த கோரிக்கையை ஏற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ரூ.1 கோடியே 50 லட்சம் செலவில் புதிய அலுவலகம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அதுவரை வேளாண் அலுவலகத்தை ஆனைமலை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தாசில்தார் அலுவலகம் செயல்பட்டு வந்த கட்டிடத்துக்கு மாற்ற அதிகாரிகள் முயன்றனர். ஆனால் திடீரென பள்ளி மேலாண்மை குழு எதிர்ப்பு தெரிவித்தது. சப்-கலெக்டர் தலைமையில் நடத்திய பேச்சுவார்த்தையிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் அந்த நடவடிக்கையும் கிடப்பில் போடப்பட்டது. எனவே கலெக்டர் தலையிட்டு இந்த பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.

இடவசதி இல்லை

கோகுல்(தாத்தூர்):

எங்கள் பகுதியில் பந்தல் காய்கறி விவசாயம் பிரதானமாக உள்ளது. மத்திய, மாநில அரசு திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ள வேளாண் அலுவலகத்துக்கு சென்றால், அலுவலர்கள் இருப்பது இல்லை. அதுகுறித்து கேட்டால், தோட்டங்களுக்கு நேரடியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். அலுவலகம் பழுதடைந்து உள்ளதால், விவசாயிகளை அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த அவர்களால் முடிவது இல்லை. எனவே அந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும். அங்கு விவசாயிகளை அழைத்து விழிப்புணர்வு கூட்டங்களை நடத்த வேண்டும். அப்போதுதான் அலுவலர்களை அனைத்து பகுதி விவசாயிகளும் சந்திக்க முடியும்.

ஜெயப்பிரியா(சின்னப்பம்பாளையம்):

ஆனைமலையில் வேளாண் அலுவலகம், உரக்கிடங்கு பழுதடைந்து கிடக்கிறது. அங்கு மேற்கூரை வழியாக மழைநீர் வழிந்தோடுகிறது. இதனால் உரம் உள்ளிட்ட இடுபொருட்கள் வீணாகும் நிலை உள்ளது. மேலும் உரக்கிடங்கில் போதிய இடவசதி இல்லாததால் ஒழுங்குமுறை விற்பனை கூடம், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட கட்டிடங்களுக்கு இடுபொருட்கள் மாற்றப்படுகிறது. அங்கு சென்று வர விவசாயிகளுக்கு கூடுதல் செலவினங்கள் ஏற்படுகிறது. இதற்கு ஒரே தீர்வு, போதிய இடவசதியுடன் உரக்கிடங்கு மற்றும் புதிய வேளாண் அலுவலகம் கட்ட வேண்டும்.

உரிய தீர்வு

தம்பி(ஆனைமலை):

கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வான 5 கிராம ஊராட்சிகளில் உள்ள விவசாயிகள் பயன் பெற உழவன் செயலி மூலம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்து கொள்ள எழுத மற்றும் படிக்க தெரியாதவர்கள், செல்போன் இல்லாதவர்கள் ஆனைமலை வேளாண் அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர். ஆனால் அங்கு அமர கூட இடவசதி இல்லை. விவசாயிகள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாகவே பல விவசாயிகள் அலுவலகத்துக்கு வருவதை தவிர்த்து விடுகின்றனர். இதனால் அந்த திட்டம் மட்டுமின்றி அரசின் பல திட்டங்கள் பற்றி விவசாயிகள் அறிந்து கொள்ள முடியாமலேயே போய்விடுகிறது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.


Next Story